அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா தீர்த்தவாரி


அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா தீர்த்தவாரி
x
தினத்தந்தி 10 Aug 2021 10:24 PM IST (Updated: 10 Aug 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

அருணாசலேஸ்வரர் கோவில் ஆடி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோவில் ஆடி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது.

ஆடி பிரம்மோற்சவ விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. அதில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவமும் ஒன்று. இந்த ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு, அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. 

இந்தநிலையில் ஆடிப்பூரம் நிறைவு விழாவையொட்டி அதிக அளவிலான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நேற்று மற்றும் இன்று (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். மேலும் தீமிதி விழாவுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

தீர்த்தவாரி

ஆடிப்பூரம் நிறைவு விழாவையொட்டி நேற்று காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. 

பராசக்தி அம்மன் பிரகாரத்தில் உலா வந்து குளத்தில் காட்சி அளித்தார். இதையடுத்து மாலையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. 

இந்த விழா பக்தர்கள் இன்றி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அலுவலர்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story