தாயை பார்க்க சைக்கிளில் புறப்பட்ட 5 வயது சிறுவன்


தாயை பார்க்க சைக்கிளில் புறப்பட்ட 5 வயது சிறுவன்
x
தினத்தந்தி 10 Aug 2021 10:36 PM IST (Updated: 10 Aug 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

தந்தையிடம் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்ற தாயை பார்க்க 5 வயது சிறுவன் சைக்கிளில் புறப்பட்டான். 15 கிலோ மீட்டர் தூரத்தில் சென்றபோது அவனை போலீசார் மீட்டனர்.

மயிலம், 

திண்டிவனம் முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் ரகுராமன். கிராம நிர்வாக உதவியாளர். இவரது மனைவி ஸ்வஸ்திக். இவர்களது மகன் சபரிநாத்(வயது 9). இவன் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். 
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் ஸ்வஸ்திக், கணவரிடம் கோபித்துக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 

தாயை பார்க்காமல் தவித்த சிறுவன் 

கடந்த சில நாட்களாக தாயை பார்க்க முடியாமல் சபரிநாத் தவித்தான். எனவே தனது தாயை பார்க்க அவன் முடிவு செய்தான். ஆனால் பஸ்சில் தியாகதுருகத்திற்கு செல்ல அவனிடம் பணம் இல்லை. எனவே பெற்றோர் வாங்கிக்கொடுத்த சிறிய சைக்கிளில் திண்டிவனத்தில் இருந்து தியாகதுருகத்திற்கு செல்ல சபரிநாத் முடிவு செய்தான். திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம், உளுந்தூர்பேட்டை வழியாக தியாகதுருகத்திற்கு 103 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து செல்ல வேண்டும். இந்த தூரத்தை ஒரு பொருட்டாக கருதாமல் சிறுவன் சபரிநாத், நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் திண்டிவனத்தில் இருந்து சைக்கிளில் தியாகதுருகத்திற்கு புறப்பட்டான். 

போலீசார் அதிர்ச்சி 

கூட்டேரிப்பட்டு, செண்டூரை தாண்டி பாதிராப்புலியூரில் இரவு 7 மணி அளவில் சென்றபோது, ரோந்து வந்த மயிலம் இன்ஸ்பெக்டர் கிருபா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சிறுவனை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவன், தியாகதுருகத்தில் உள்ள தனது தாயை பார்க்க செல்வதாக தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், திண்டிவனத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம்தான் வந்திருக்கிறாய். இன்னும் 88 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் எப்படி செல்வாய் என்று கேட்டனர். அதற்கு சிறுவன் சபரிநாத், 1 மணி நேரத்தில் 15 கிலோ மீட்டர் வந்து விட்டேன். இப்படியே வேகமாக சென்றால், விரைவில் தாயை பார்த்து விடுவேன் என்று கூறினான். 

தந்தையிடம் ஒப்படைப்பு 

ஆனால் அவனை சைக்கிளில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து ரகுராமனை செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார், நடந்த விவரத்தை கூறினர். உடனே அவர், விரைந்து வந்தார். சிறுவனுக்கு அறிவுரை கூறிய போலீசார், அவனை தந்தையிடம் ஒப்படைத்தனர்.

Next Story