முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது அரசியல் தாக்குதல் நடத்துகிறார்கள்


முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது அரசியல் தாக்குதல் நடத்துகிறார்கள்
x
தினத்தந்தி 10 Aug 2021 10:45 PM IST (Updated: 10 Aug 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ததால் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது அரசியல் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.

பொறையாறு:
கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ததால் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது அரசியல் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. கூறினார்.
ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அ.தி.மு.க. அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். 
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வெள்ளை அறிக்கை
அ.தி.மு.க. அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது கடன் சுமை, வரி வருவாய், மொத்த வருவாய், பற்றாக்குறை எவ்வளவு என்பது குறித்து வெளிப்படையாக அறிவித்து விட்டுத்தான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 
கடன்வாங்காத அரசு நாட்டில் எங்கே இருக்கிறது?. வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கிறோம். கடன் அவ்வளவு இருக்கிறது, இவ்வளவு இருக்கிறது என்று சொல்லும் தி.மு.க., நாங்கள் ஆட்சி நடத்த விரும்பவில்லை. அவர்களே ஆட்சி நடத்தட்டும் என்று கூறவேண்டியது தானே. ஆட்சிக்கு வந்தவர்கள் இருக்கிறதை வைத்து ஆட்சி நடத்த வேண்டும். அ.தி.மு.க. மீது குற்றம் சுமத்துவது வேண்டாத ஒன்று, அவசியமற்றது. இது மற்றவர்களை ஏளனம் செய்ய வேண்டும் என்பதற்காக கூறுவது. 
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ேசாதனை நடக்கிறது. அச்சுருத்தி, மிரட்டி முடக்கிப்போட இதுபோன்ற செயல்களில் தி.மு.க. ஈடுபடுகிறது. 
அ.தி.மு.க தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று மாறி மாறி பார்த்திருக்கிறோம். அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வகையில் தி.மு.க. செயல்பாடுகள் இருக்கிறது. இதனை அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் நிமிர்ந்து நின்று சந்திப்பார்கள். 
அரசியல் தாக்குதல்
தி.மு.க. ஆட்சியை கைப்பற்ற விவசாயிகள் வாக்குகளை மொத்தமாக பெற வேண்டும் என்பதற்காக டெல்டா மாவட்டத்தை குறிவைத்து நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 தருவோம் என்று கூறினார்கள். முதலில் அதை கொடுக்க வேண்டும். எங்கெல்லாம் அறுவடை தொடங்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கேட்காமலேயே கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். 
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்தவர் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அந்த கோபம் முதல்-அமைச்சருக்கு அதிகமாக இருப்பதால் அரசியல் தாக்குதல் நடத்துகிறார்கள். 
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி, மயிலாடுதுறை தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்கத்தினர் உடன் இருந்தனர்.

Next Story