தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது


தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரி முன்னோடி மாவட்டமாக திகழ்கிறது
x
தினத்தந்தி 10 Aug 2021 10:54 PM IST (Updated: 10 Aug 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

தடுப்பூசிகள் செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் முன்னோடியாக திகழ்கிறது என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

ஊட்டி

தடுப்பூசிகள் செலுத்துவதில் நீலகிரி மாவட்டம் முன்னோடியாக திகழ்கிறது என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். 

 உதவி கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது:-

முன்னோடி மாவட்டம் 

நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போட பொதுமக்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு தருகின்றனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அதிகளவு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு முன்னோடி மாவட்டமாக நீலகிரி திகழ்கிறது. 

தடுப்பூசிகள் போடும் பணி அதிக அளவு நடைபெறுவதால் தன்னார்வ அமைப்புகள், நிறுவனங்கள் தாமாக முன்வந்து 2 ஆயிரம் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கி உள்ளது. இதுதவிர இன்னும் 10 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. 

வாகன டிரைவர்கள் 

நீலகிரி மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்குவதால் அனைத்து வணிக நிறுவனங்களிலும் பணியாற்றும் பணியாளர்கள், தொழிலாளர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். 

இல்லையெனில் வணிக நிறுவனங்களை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்படும். போக்குவரத்து துறை மூலம் வாகன டிரைவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

எனவே அந்தந்தப் பகுதியில் நடை பெறும் முகாம்களில் சென்று இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். 

முகக்கவசம் அணிய வேண்டும்

சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு இருந்தாலும் நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதை கருத்தில் கொண்டு அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

நிகழ்ச்சியில் தாசில்தார் தினேஷ், வட்டார மருத்துவ அலுவலர் ஹாஜரா பேகம் உள்பட தன்னார்வ மற்றும் தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story