139 பேருக்கு புதிய ரேஷன் கார்டு


139 பேருக்கு புதிய ரேஷன் கார்டு
x
தினத்தந்தி 10 Aug 2021 10:54 PM IST (Updated: 10 Aug 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறை அருகே 139 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளை காந்திராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்.

 திண்டுக்கல்: 

குஜிலியம்பாறை அருகே லந்தக்கோட்டையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் தலைமை தாங்கி பேசினார். தாசில்தார் சரவணவாசன், வட்ட வழங்கல் அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். 

கூட்டுறவு சார்பதிவாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் காந்திராஜன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 139 புதிய ரேஷன் கார்டுகளை பொதுமக்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படாமல் இருந்தது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். 

அதன்படி தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாமை அவர் தொடங்கி வைத்தார். 

பின்னர் திண்டுக்கல்லில் இருந்து லந்தக்கோட்டை வழியாக கரூருக்கும், வேடசந்தூரில் இருந்து குஜிலியம்பாறை வழியாக லந்தக்கோட்டைக்கும் 2 புதிய வழித்தடங்களில் பஸ் சேவையை எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் குஜிலியம்பாறை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பாளையம் பேரூர் செயலாளர் சம்பத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், முன்னாள் வேடசந்தூர் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் பாஸ்டின், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, லந்தக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பிரியா, அரசு போக்குவரத்துக்கழக மண்டல பொது மேலாளர் கணேசன் மற்றும் குஜிலியம்பாறை வட்டார சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story