பொதுமக்கள் 1-வது மண்டல அலுவலகத்தில் மனு
பொதுமக்கள் 1வது மண்டல அலுவலகத்தில் மனு
அனுப்பர்பாளையம், ஆக. 11-
திருப்பூர் மாநகராட்சி 2-வது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளையம் திருவள்ளுவர்நகரை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பா.ஜ.க. 2-வது வார்டு தலைவர் ராஜன், துணை தலைவர் தண்டபானி ஆகியோர் தலைமையில், மண்டல தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலையில் அனுப்பர்பாளையத்தில் உள்ள மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- 2-வது வார்டுக்குட்பட்ட திருவள்ளுவர்நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சாலை போடும் பணிக்காக குழிதோண்டிய போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், இதுவரை பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். அந்த பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலியாக உள்ள நிலையில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது அவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. இதேபோல் அம்பேத்கர்நகர் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெறும் இடத்தில் சிதறிக்கிடக்கும் ஜல்லிக் கற்களால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. அந்த பகுதியில் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் உள்ள கழிவறை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே அந்த கழிவறையை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
Related Tags :
Next Story