2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை
2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை
ஊட்டி
ஊட்டியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பால் வியாபாரி
ஊட்டி மார்லிமந்து பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45), பால் வியாபாரி. இவருடைய மனைவி கீதா (35). இவர்களுக்கு ரஷீதா (16) என்ற மகளும், விஸ்வந்தர் (12) என்ற மகனும் இருந்தனர்.
சந்திரன் பால் வியாபாரம் செய்து வந்ததுடன், அவ்வப்போது விவசாயமும் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சந்திரன் வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. பின் பகுதியில் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டு இருந்த மாடு பலமுறை கத்திக்கொண்டே இருந்தது.
கதவு திறக்கவில்லை
இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து, சந்திரன் வீட்டின் கதவை தட்டினார்கள். அவர்கள் பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே அவர்கள் வீட்டின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர்.
அப்போது சந்திரன், கீதா ஆகியோர் வீட்டிற்குள் தூக்கில் தொங்கியபடியும், 2 குழந்தைகளும் அங்குள்ள கட்டிலில் படுத்த படியும் இருந்தனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை
பின்னர் அவர்கள் இது குறித்து புதுமந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் சந்திரன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு சந்திரன், கீதா ஆகியோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது
தெரியவந்தது.
போலீசார் விசாரணை
உடனே அவர்கள் 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-
பால் வியாபாரம் செய்து வந்த சந்திரன், யாரிடமும் கடன் வாங்காமல் இருந்து உள்ளார். இந்த நிலையில் கொரோனா காரணமாக அவருக்கு சரியாக வியாபாரம் ஆகவில்லை. அத்துடன் வேலையும் கிடைக்கவில்லை.
கடன் வாங்கினார்
இதனால் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்து உள்ளார். அதில் அவருக்கு போதிய வருமானம் கிடைக்க வில்லை. அத்துடன் தனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு திரும்ப கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தமும் சந்திரனுக்கு ஏற்பட்டது.
கடன் வாங்கியவர்களுக்கு திரும்ப கொடுக்கவில்லை என்றால், அவர்கள் வீட்டிற்கு வந்து கேட்கும்போது, தனது நன்மதிப்பு பாதிக்கும் என்று அவர் எண்ணி உள்ளார். எனவே குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மனைவியிடம் கூறி உள்ளார்.
விஷம் கொடுத்து கொன்றனர்
அதன்படி விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) சாப்பாட்டில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தனர். அதை அவர்கள் சாப்பிட்டதும் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கினார்கள். பின்னர் அவர்கள் துடிதுடித்து உயிரிழந்தனர்.
குழந்தைகள் உயிரிழந்துவிட்டனர் என்பதை உறுதி செய்த பின்னர், சந்திரனும், கீதாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஊட்டியில் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை என்பதால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story