யானை தந்தத்தில் செய்த பொருட்களை விற்றவர் கைது


யானை தந்தத்தில் செய்த பொருட்களை விற்றவர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2021 11:15 PM IST (Updated: 10 Aug 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

யானை தந்தத்தில் செய்த பொருட்களை விற்றவர் கைது

கோத்தகிரி

கோத்தகிரியில் யானை தந்தத்தில் செய்த பொருட்களை விற்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். 

முதியவர் வீட்டில் சோதனை 

கன்னியாகுமரி மாவட்டத்தில் யானைத் தந்தத்தால் செய்யப் பட்ட பொருட்களை விற்பனை செய்தவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் கோத்தகிரியை சேர்ந்தவரிடம் அந்த பொருட்களை வாங்கியது தெரியவந்தது.

இது குறித்த தகவலின்பேரில் நீலகிரி மாவட்ட வன அதிகாரி குருசாமி தபேலா தலைமையில் உதவி வன பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர்கள் சரவணன், சசிகுமார் உள்பட வனத்துறை மற்றும் போலீசார் கோத்தகிரி ஹோப் பார்க் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (வயது 71) வீட்டில் அதிரடி  சோதனை மேற்கொண்டனர்.

முதியவர் கைது 

இந்த சோதனையில் அவருடைய வீட்டில் 2 யானை தந்தங்கள், தந்தத்தால் செய்யப்பட்ட ஏராளமான சிற்பங்கள், 2 யானையின் எலும்புகள், கை வளையம், கழுத்தில் அணியும் மாலை மற்றும் யானை தந்தத்தினால் செய்யப்பட்ட ஏராளமான பொருட்களை யும் பறிமுதல் செய்தனர். 

அதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் நாகராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பலருக்கு விற்பனை 

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கைதான நாகராஜ், 
யானை முடி, யானைத் தந்தத்திலான பொருட்களை சென்னை, கொல்கத்தா, கேரள மாநிலம் குருவாயூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வந்து உள்ளார். 

மேலும் அவர் தெங்குமரஹாடா வனப்பகுதியில் இருந்து கீழே கிடந்த யானையின் எலும்புகளை எடுத்து உள்ளார். தந்தத்தில் சிற்பங்களை செய்து பலருக்கும் விற்று உள்ளார். எனவே தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். 


Next Story