25 சதவீத உரிமையாளர்கள் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்:லாரிகளுக்கான வரியை உயர்த்தும் எண்ணத்தை கைவிட வேண்டும்-மாநில சம்மேளன செயலாளர் வாங்கிலி பேட்டி


25 சதவீத உரிமையாளர்கள் தொழிலை விட்டு வெளியேறியுள்ளனர்:லாரிகளுக்கான வரியை உயர்த்தும் எண்ணத்தை கைவிட வேண்டும்-மாநில சம்மேளன செயலாளர் வாங்கிலி பேட்டி
x
தினத்தந்தி 10 Aug 2021 11:16 PM IST (Updated: 10 Aug 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு லாரிகளுக்கான வரியை உயர்த்தும் எண்ணத்தை உடனடியாக கைவிட வேண்டும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல்:
ரூ.5,624 கோடி வருமானம்
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளருமான வாங்கிலி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
லாரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தமிழகம் முழுவதும் சுமார் 25 சதவீத லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து தங்களின் லாரிகளை இயக்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறி சென்று விட்டனர். லாரிகளுக்கான கட்டணம், வரி போன்றவற்றால் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரத்து 624 கோடி தமிழக அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இது தவிர மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.328 கோடி வருவாய் கிடைக்கிறது. 
அபாயம்
இந்தநிலையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், தமிழகத்தில் லாரிகளுக்கான வரி கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது என்று தெரிவித்து உள்ளார். இதனால் லாரிகளுக்கான வரியை உயர்த்துவதற்கு அவர் ஏற்பாடுகள் செய்து வருவதாக நாங்கள் அச்சப்படுகிறோம். 
லாரி தொழில் நலிவடைந்து வரும் தற்போதைய சூழலில் தமிழக அரசு லாரிகளுக்கான வரியை உயர்த்தினால், தொழில் மேலும் பாதிக்கப்படும். இதனால் பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் இந்த தொழிலைவிட்டு வெளியேறும் அபாயம் உருவாகி விடும். மேலும், தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் சரக்கு போக்குவரத்து தொழில் அழியும் நிலைக்கு தள்ளப்படும். 
கைவிட வேண்டும்
எனவே தமிழக அரசு லாரிகளுக்கான வரியை உயர்த்தும் எண்ணத்தை உடனடியாக கைவிட வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் கோரிக்கை தொடர்பாக நாங்கள் கொடுத்த கெடு முடிவடைந்து விட்ட நிலையில், தென்மண்டல லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் மீண்டும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பு வெளியிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் அருள், பொருளாளர் சீரங்கன், துணை தலைவர் பாலசந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story