10 ஆயிரம் விதைப்பந்துகளை உருவாக்கும் புலியூர் அரசு பள்ளி மாணவர்கள்


10 ஆயிரம் விதைப்பந்துகளை உருவாக்கும் புலியூர் அரசு பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 11 Aug 2021 12:35 AM IST (Updated: 11 Aug 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா கால விடுமுறையை பயன்படுத்தி 10 ஆயிரம் விதைப்பந்துகளை புலியூர் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கி வருகின்றனர்.

வெள்ளியணை
கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன் பாதிக்கப்படும் என்பதை அறிந்து ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்து கற்பித்தல், பாடங்களை நடத்தி அதை வீடியோ பதிவாக வாட்ஸ் அப் மூலம் மாணவர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
இதேபோல், தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக படங்களை கற்றுக்கொள்ள கால அட்டவணையை வழங்கி அதன் மூலம் உரிய நேரத்தில் பாடங்களை படிக்க உதவி புரிகின்றனர். 
கைவினைப்பொருட்கள்
தமிழகத்தின் பெரும்பாலான பள்ளிகளில் மேற்கண்ட செயல்பாடுகள் செயல்படுத்தப்படுவதை போல் கரூர் மாவட்டம் புலியூரில் செயல்படும் அரசு உதவி பெறும் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இப்பள்ளியில் மேற்கண்ட நடைமுறைகளில் மாணவர்கள் பாடங்களை கற்கும் நேரத்தை தவிர பிற நேரங்களில் செல்போனில் ஆன்லைன் விளையாட்டுக்களில் ஈடுபடுவதையும், விரும்பத்தகாத செயல்களில் செயல்படுவதையும் தடுக்கும் நோக்கிலும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களின் முயற்சியால் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் கைவினை பொருட்களை செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
உலக வெப்பமயமாதல்
மேலும் ஒரு முயற்சியாக உலக வெப்பமயமாதலை தடுக்கும் பொருட்டும், வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத நிலையை உருவாக்கும் வகையிலும் அதிகப்படியான மரங்களை நட்டு வளர்க்க இந்த கொரோனா கால விடுமுறையை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியதின் விளைவாக அதற்கான முயற்சியில் தற்போது மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி 10 ஆயிரம் விதைப்பந்துகளை உருவாக்கி அவற்றை கொண்டு ஒவ்வொரு மாணவரும் 10 விதைப்பந்துகளை தங்களின் வீடு மற்றும் பொது இடங்களில் விதைத்து அவற்றை நன்கு பராமரித்து மரமாக வளர்க்க முடிவு செய்து அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
விதைப்பந்துகள்
இதற்கான விதைப்பந்துகளை மாணவர்கள் தாங்களாகவே உருவாக்கி தங்கள் பகுதியில் விதைத்தது போக மீதியை பள்ளியில் அளித்து அதை விதைப்பந்துகளை உருவாக்க முடியாத மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள உதவி வருகின்றனர். மேலும் மாணவர்களுக்கு உதவியாக ஆசிரியர்களும் விதைப் பந்துகளை உருவாக்கி வருகின்றனர். 
இந்த விதைப்பந்துகளை நேற்று பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெரால்ட் ஆரோக்கியராஜிடம் மாணவர்கள் வழங்கி அதை பள்ளி வளாகத்தில் தூவினர். இந்தநிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story