பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
நெல்லையில் குடிநீ்ர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்சினை
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்புத்தொண்டர் தெரு, சிந்தாமணி தெரு உள்ளிட்ட தெருக்களில் கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் வரவில்லை.
இதனால் அந்த பகுதி மக்கள் தங்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை மாநகராட்சியில் மனு கொடுத்து உள்ளனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சாலைமறியல்
இதனால் அந்த பகுதி பெண்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘நெல்லை வண்ணார்பேட்டையில் ஒரு குடிநீர் தொட்டி இருந்தபோது கூட அனைத்து தெருக்களுக்கும் தண்ணீர் வந்தது. இப்போது இரண்டு தொட்டிகள் அமைக்கப்பட்ட பிறகு எங்கள் பகுதிக்கு சரிவர தண்ணீர் வருவதில்லை. இதனால் நாங்கள் குடிநீருக்கு கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு சீராக குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story