நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழா; காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு வைபவம்
நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூர திருவிழாவில் காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு வைபவம் நடந்தது.
நெல்லை:
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டு வைபவம் நடந்தது.
ஆடிப்பூர திருவிழா
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான காந்திமதி அம்பாளுக்கு முளைகட்டும் வைபவம் நேற்று நடைபெற்றது.
அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் காந்திமதி அம்பாளுக்கு வளையல் அணிவிக்கப்பட்டு, அம்பாளுக்கு கண்ணாடி காட்டி நலுங்கு வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் முளைகட்டிய தானியங்களை சிறப்பு பூஜை செய்து அம்பாளுக்கு மடியில் கட்டி பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் கொரோனா நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளையொட்டி பக்தர்கள் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் கோவிலின் வெளி பகுதிகளில் ஏராளமான பெண் பக்தர்கள் நின்று வழிபட்டனர்.
கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையையொட்டி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பேராத்து செல்வி அம்மன் கோவிலில் நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. மதியம் 1 மணிக்கு பேராத்துசெல்வி அம்மனுக்கு வளைகாப்பு வைபவமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோல் நெல்லை டவுன் பிட்டாபுரத்தி அம்மன் கோவில், கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோவில், பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
ஆடிப்பூரத்தையொட்டி நெல்லை டவுன் சாலியர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், நெல்லை கொக்கிரகுளம் காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள விசாலாட்சி அம்மன், மேல குலவணிகர்புரம் தான்தோன்றியப்பர் கோவிலிலுள்ள சிவகாமி அம்பாளுக்கும் நேற்று மதியம் வளைகாப்பு வைபவம் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
Related Tags :
Next Story