மின்சாரம் தாக்கி தமிழக சண்டை கலைஞர் இறந்த வழக்கில் கைது: திரைப்பட இயக்குனர் உள்பட 3 பேர் சிறையில் அடைப்பு
மின்சாரம் தாக்கி தமிழக சண்டை கலைஞர் இறந்த வழக்கில் கைதான இயக்குனர் உள்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பெங்களூரு:
சண்டை கலைஞர் சாவு
ராமநகர் மாவட்டம் பிடதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜோகனபாளையா கிராமத்தில் ‘லவ் யூ ரச்சு’ என்ற கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் வைத்து சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடந்தது. இதில் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவரும், பெங்களூருவில் வசித்து வந்தவருமான விவேக் என்ற சண்டை கலைஞர் மின்சாரம் தாக்கி இறந்தார். ரஞ்சித் என்ற சண்டை கலைஞர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக லவ் யூ ரச்சு படத்தின் இயக்குனர் சங்கர் ராஜ், சண்டை பயிற்சியாளர் வினோத்குமார், கிரேன் வாகன டிரைவர் மகாதேவ், தோட்ட உரிமையாளர் புட்டராஜ் ஆகிய 4 பேரை பிடித்து சென்று பிடதி போலீசார் விசாரித்தனர். மேலும் சம்பவம் குறித்து சங்கர்ராஜ், திரைப்பட தயாரிப்பாளர் குருதேஷ்பாண்டே, சண்டை பயிற்சியாளர் வினோத்குமார், தயாரிப்பு மேலாளர் பெர்னாண்டஸ், கிரேன் டிரைவர் மகாதேவ் ஆகியோர் பிடதி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் படக்குழுவினரின் அலட்சியம், கவனக்குறைவால் மின்சாரம் தாக்கி விவேக் இறந்தது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இந்த நிலையில் விசாரணைக்கு அழைத்து சென்ற இயக்குனர் சங்கர் ராஜ், சண்டை பயிற்சியாளர் வினோத்குமார், கிரேன் டிரைவர் முனியப்பா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரையும் ராமநகர் சிட்டி சிவில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 3 பேரையும் வருகிற 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 3 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட விவேக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் விவேக்கின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த விவேக்கின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். இந்த காட்சி காண்போர் நெஞ்சை கரைய வைத்தது. இறுதி அஞ்சலி முடிந்ததும் விவேக்கின் உடல் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மயானத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story