காங்கிரஸ் தலைவர்களை ஆபாசமாக விமர்சித்த மந்திரி ஈசுவரப்பா
காங்கிரஸ் தலைவர்களை மந்திரி ஈசுவரப்பா ஆபாசமாக விமர்சித்தார். அதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
மந்திரிசபை விரிவாக்கம்
கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா தனது துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசியல் கட்சி என்கிறபோது சில குழப்பங்கள், அதிருப்திகள் இருப்பது சகஜம் தான். இலாகா ஒதுக்கீட்டில் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எங்கள் கட்சி மேலிடம் இதை சரிசெய்யும். ஒரு குடும்பத்திற்கு உள்ளேயே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. மந்திரிசபை விரிவாக்கம் செய்யும்போது பதவி கிடைக்காதவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவது சகஜமானது தான்.
காங்கிரஸ் தலைவர்கள்...
மத்திய மந்திரிசபையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மருத்துவ கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் தங்களின் பதவியை தியாகம் செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு வந்தனர். மந்திரிசபையில் அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இல்லாவிட்டால் பா.ஜனதா ஆட்சி அமைந்திருக்காது.
காங்கிரஸ் மூத்த தலைவரான பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி. என்னை விமர்சித்து கருத்து கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் போதையில் மிதப்பவர்கள். அதனால் அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள். போதையில் மிதப்பவர்கள் என்ற வார்த்தையை வாபஸ் பெறுகிறேன். ஜோக்கர்கள் என்று சொல்வதற்கு பதிலாக போதையில் மிதப்பவர்கள் என்று கூறிவிட்டேன்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
இந்த நிலையில் மந்திரி ஈசுவரப்பாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் காங்கிரஸ் தலைவர்களை ஆபாசமாக விமர்சித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
கலாசாரம் இல்லாதவர்
குறிப்பாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவரை மந்திரிசபையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சித்தராமையா கூறுகையில், "ஈசுவரப்பா கலாசாரம் இல்லாதவர். அதனால் அவர் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இவ்வாறு பேசுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே அவர் இவ்வாறு பலமுறை பேசியுள்ளார்" என்றார்.
அதற்கு முன்னதாக பி.கே.ஹரிபிரசாத் எம்.எல்.சி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "மந்திரி ஈசுவரப்பா, பா.ஜனதாவினரிடம் யாராவது பிரச்சினை செய்தால் அவர்களை திருப்பி தாக்குங்கள் என்று கூறியுள்ளார். ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர் இவ்வாறு பேசலாமா?. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். எடியூரப்பாவை நீக்கிவிட்டு முதல்-மந்திரி பதவியில் அமர வேண்டும் என்று ஈசுவரப்பா முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. துணை முதல்-மந்திரி பதவி கூட அவருக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாக அவருக்கு பித்து பிடித்துவிட்டது. அதனால் அவர் வாய்க்கு வந்தபடி உளறுகிறார்" என்றார்.
Related Tags :
Next Story