முதல்-மந்திரிக்கு பூங்கொத்து, சால்வை, நினைவு பரிசு வழங்க தடை - கர்நாடக அரசு உத்தரவு
முதல்-மந்திரிக்கு பூங்கொத்து, சால்ைவ, நினைவு பரிசுகளை வழங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதே வேளையில் அவருக்கு புத்தகங்களை வழங்கலாம் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
பசவராஜ் பொம்மை
கர்நாடக முதல்-மந்திரியாக கடந்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். இந்த நிலையில் அவர், கர்நாடக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் நேற்று பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக அவரை வரவேற்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவிக்க முயன்றனர். ஆனால் அதனை பசவராஜ் பொம்மை நிராகரித்துவிட்டார். மேலும் இனி முதல்-மந்திரிக்கு பூங்கொத்து, சால்வை, நினைவு பரிசு வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தேவையற்ற செலவு
மேலும் இது தேவையற்ற செலவு என்று கூறிய அவர், இந்த செலவை குறைக்க வேண்டும் என்றார். அத்துடன் இதுகுறித்து ஒரு உத்தரவை பிறப்பிக்கும்படி கர்நாடக அரசின் தலைமை செயலாளருக்கு பசவராஜ் பொம்மை அறிவுறுத்தினார்.
இதையடுத்து தலைமை செயலாளர் ரவிக்குமார் நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பூங்கொத்து, சால்வைக்கு தடை
கர்நாடக முதல்-மந்திரியை சந்திக்க வருபவர்கள் மற்றும் அதிகாரிகள் என யாராக இருந்தாலும், பூங்கொத்து, சால்வை, பழக்கூைட, நினைவு பரிசுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
மேலும் அரசு தொடர்பான கூட்டங்கள், விழாக்களிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு பதிலாக கன்னட புத்தகங்களை மட்டுமே முதல்-மந்திரிக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினை தொடர்ந்து...
ஏற்கனவே கர்நாடக மின்சார துறை மந்திரியாக உள்ள சுனில்குமார் தன்னை சந்திக்க வருவோர் சால்வை, பூங்கொத்து உள்ளிட்டவை கொண்டு வர தடை விதித்துள்ளார். அதற்கு பதிலாக அவர் கன்னட புத்தகங்களை வழங்கும்படி உத்தரவிட்டார். மேலும் தனக்கு இவ்வாறு வரும் புத்தகங்களை அவர் உடுப்பி மாவட்டம் கார்கலாவில் உள்ள நூலகத்திற்கு வழங்கி வருகிறார்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னை பார்க்க வரும் அரசு அதிகாரிகள் பூங்கொத்து, பழக்கூடை, சால்வை எதுவும் கொண்டு வர வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக புத்தகங்களை வழங்கும்படியும் கூறியதுடன், தனக்கு வந்த புத்தகங்களை நூலகங்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வழியில் தற்போது கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் புத்தகங்களை வழங்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story