கர்நாடகத்தில், சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறுவது கட்டாயம்; பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் இனி சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி பெறுவது கட்டாயம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
பெங்களூரு:
ஆலோசனை நடத்தினேன்
"லவ் யு ரச்சு" என்ற கன்னட சினிமா படப்பிடிப்பு ராமநகர் மாவட்டம் பிடதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டது. இதில் உயரத்தில் செல்லும் உயர் மின் அழுத்த கம்பி மீது கிரேன் உரசியதை அடுத்து மின்சாரம் தாக்கி ஸ்டண்ட் கலைஞர் விவேக் என்பவர் இறந்தார். இந்த படப்பிடிப்புக்கு முன் அனுமதி பெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் உயர் அழுத்த மின் கம்பி செல்லும் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியது ஏன் என்ற கேள்வியை பல்வேறு தரப்பினரும் எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பிடதியில் கன்னட சினிமா படப்பிடிப்பின்போது நடந்த சம்பவத்தில் அப்பாவி இளைஞர் ஒருவர் இறந்தது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. இதனால் அவரையே நம்பியுள்ள குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இனி இத்தகைய சம்பவங்கள் நடைபெறக்கூடாது. இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
சினிமா படப்பிடிப்பு
கர்நாடகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒரு வழிகாட்டுதலை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வழிகாட்டுதல் நாளை(வியாழக்கிழமை) வெளியிடப்படும். இனி கர்நாடகத்தில் சினிமா படப்பிடிப்பு நடத்த முன் அனுமதி பெறுவது கட்டாயம் ஆக்கப்படுகிறது. இத்தகைய விதிமுறைகள் ஏற்கனவே அமலில் உள்ளன.
ஆனாலும் சிலர் அதை பின்பற்றுவது இல்லை. அதனால் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. இதனால் இந்த விதிமுறைகளை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை முன் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்துவது தெரியவந்தால், அத்தகையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Related Tags :
Next Story