கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை; பசவராஜ் பொம்மை உத்தரவு


போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை.
x
போலீஸ் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை.
தினத்தந்தி 11 Aug 2021 1:56 AM IST (Updated: 11 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பசவராஜ் பொம்மை முதல் முறையாக நேற்று போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்யும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பெங்களூரு:

போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

  கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து மந்திரி சபை விரிவாக்கம் மற்றும் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மந்திரி சபை விரிவாக்கம் முடிவடைந்து, மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கப்பட்டுவிட்டது.

  இந்த நிலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதை தொடர்ந்து முதல்முறையாக பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் பெங்களூரு விதானசவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பசவராஜ் பொம்மை பேச்சு

  இதில் போலீஸ் மந்திரி அரகா ஞானேந்திரா, டி.ஜி.பி. பிரவீண்சூட், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கர்நாடகத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், குற்றச்செயல்களை தடுக்கவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

  இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
  கர்நாடக போலீஸ் துறையை நவீனப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மூத்த போலீஸ் அதிகாரிகள் பொறுப்பான முறையில் பணியாற்ற வேண்டும்.

கட்டாயம் பரிசோதனை

  மாநிலத்தின் எல்லை பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். முடிந்தவரை குற்றங்கள நடைபெறாமல் தடுக்க முயற்சி செய்ய வேண்டும். குற்றங்கள் வைரஸ் போன்றவை.
அதனால் குற்றங்களை மிக கடுமையாக செயல்பட்டு கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

  போதைப்பொருள், சூதாட்டம் உள்பட அனைத்து வகையான சட்ட விரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். இதில் போலீசார் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. குற்றங்கள் நடைபெறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.

கடும் நடவடிக்கை

  சட்டம்-ஒழுங்கை சரியான முறையில் பராமரிப்பதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். அமைதியை நிலைநாட்டுவதற்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் மற்றும் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்யும் சமூக விரோதிகள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நிலம் தொடர்பான குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும். மாநிலத்தின் பாதுகாப்பு பிரிவு மேலும் பலப்படுத்தப்படும். சிறைவாசிகளின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் துறை தோழமை உணர்வுடன் செயல்பட வேண்டும்.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

விசாரணையை துரிதப்படுத்த...

  அதைத்தொடர்ந்து பேசிய மந்திரி அரகா ஞானேந்திரா, "போலீஸ் துறையை மேம்படுத்த தேவையான உதவிகளை முதல்-மந்திரி வழங்க வேண்டும். குற்ற வழக்குகள் தொடர்பான விசாரணையை துரிதமாக முடிக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய வழக்குகளில் விசாரணை தாமதமாவதை பொறுத்துக்கொள்ள முடியாது" என்றார்.

  இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ரவிக்குமார், போலீஸ் துறை கூடுதல் தலைமை செயலாளர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story