சாலையில் உருவான ராட்சத பள்ளத்தால் பரபரப்பு
மணவாளக்குறிச்சியில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தோன்றிய ராட்சத பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
மணவாளக்குறிச்சி:
மணவாளக்குறிச்சியில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தோன்றிய ராட்சத பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டு குடிநீர் திட்டம்
குமரி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்களுக்கு குழித்துறை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக காப்புகாடு பகுதியில் இருந்து தேங்காப்பட்டணம், மிடாலம், கருங்கல், திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை, ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி, தெங்கம்புதூர் வழியாக கன்னியாகுமரி வரை சாலையின் நடுவே ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.
ராட்சத பள்ளம்
இந்தநிலையில் நேற்று மாலை மணவாளக்குறிச்சி சந்திப்பு அருகே குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் பீறிட்டு வெளியே சாலையில் ஆறாக ஓடியது.
இதை பார்த்த பொதுமக்கள் உடனே அந்த பகுதி வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டது.
இதற்கிடைேய குழாய் உடைந்த பகுதியில் மண் இடிந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story