மின்கம்பத்தில் மோதி வீட்டுக்குள் புகுந்த லாரி
ஆரல்வாய்மொழி அருகே அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின்கம்பத்தில் மோதி விட்டு வீட்டுக்குள் புகுந்தது. இதில் ஒரு குடும்பமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின்கம்பத்தில் மோதி விட்டு வீட்டுக்குள் புகுந்தது. இதில் ஒரு குடும்பமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
வீட்டுக்குள் புகுந்தது
ஆரல்வாய்மொழி அடுத்த குமாரபுரத்தில் இருந்து சிமெண்டு பாரம் ஏற்றிக்கொண்டு திங்கள்சந்தையை நோக்கி ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை குலசேகரத்தை சேர்ந்த தினேஷ்(வயது 37) என்பவர் ஓட்டினார். வெள்ளமடம் மெயின் ரோடு வழியாக வந்தபோது, திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மின் கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் சுக்குநூறாக உடைந்து கீழே விழுந்தது. இதில் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. பின்னர், அதே வேகத்தில் லாரி பயங்கர சத்தத்துடன் அருகில் உள்ள பொன்பாண்டியன் (வயது 60) என்பவரின் வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்தது.
குடும்பமே உயிர் தப்பியது
இந்த விபத்தில் வீட்டின் முன் பக்க அறை இடிந்து தரைமட்டமானது. சத்தம் கேட்டு வெளியே வந்த பொன் பாண்டியன் குடும்பத்தினர், வீடு தரைமட்டம் ஆகியும், லாரி கவிழ்ந்து கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நல்லவேளையாக அவர்கள் பக்கத்து அறையில் தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் லாரி டிரைவர் தினேஷ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டது. பின்னர், அதில் இருந்த சிமெண்டு மூடைகள் மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story