ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு


ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Aug 2021 3:07 AM IST (Updated: 11 Aug 2021 3:07 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகள் இன்று ஏலமிடப்படுகிறது.

தஞ்சாவூர்;
தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட கடைகள் இன்று ஏலமிடப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற முன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடைகள் ஏலம்
தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ் நிலையம் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய கடைகள் கட்டப்பட்டன. அதன்படி பழைய பஸ் நிலையத்தில் புதிதாக 54 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 2 உணவகம், மற்ற 52 கடைகள் ஆகும்.
திருவையாறு பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு அதில் தற்போது வணிக வளாகம் மற்றும் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 31 கடைகளும், 8 உணவகங்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு பொது ஏலம் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
ஆயிரம் பேர் குவிந்தனர்
இதில் கடைகளுக்கு ஏலம் எடுக்க ரூ.2 லட்சமும், உணவகங்களுக்கு ரூ.5 லட்சமும் காசோலை எடுத்து கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுத்தவர்கள் மட்டும் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஏலம் தொடர்பான முன் விளக்க கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் 10-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலை 10 மணி முதலே மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள், வணிகர் சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் குவியத்தொடங்கினர். மேலும் பழைய மற்றும் திருவையாறு பஸ் நிலைய பகுதிகளில் ஏற்கனவே கடை வைத்து இருந்த வியாபாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆணையர் விளக்கம்
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், கடைகளை ஏலம் எடுப்பவர்கள் வரைவோலை எடுத்து கொடுப்பது மற்றும் அதனுடன் இணைத்து கொடுக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
இதில் மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், மேலாளர் கிளமெண்ட், வருவாய் அலுவலர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story