கேரள முதல்-மந்திரி, கலெக்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமானப்படை முன்னாள் ஊழியர் கைது


கேரள முதல்-மந்திரி, கலெக்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமானப்படை முன்னாள் ஊழியர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2021 4:06 AM IST (Updated: 11 Aug 2021 4:06 AM IST)
t-max-icont-min-icon

கேரள முதல்-மந்திரி, கலெக்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விமானப்படை முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:
கேரள முதல்-மந்திரி, கலெக்டர்களுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  விமானப்படை முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்
சேலம் 5 ரோடு அருகே உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 முறை மர்ம நபர் மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருந்தார். அடுத்த சில நாட்களில் மாமாங்கம் அருகே உள்ள ஒரு ஓட்டல், சேலம் கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றுக்கும் செல்போனில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை பிடிக்க, சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் செல்வம், இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
கோவை கலெக்டர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கலெக்டர், கேரள முதல்-மந்திரி ஆகியோரின் செல்போன் எண்ணில்மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு எனக்கு கடன் பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க ஒருவரை (மீடியேட்டர்) நியமிக்க வேண்டும். இல்லை என்றால் கேரள ரெயில் நிலையம் உள்ளிட்ட சில இடங்களில் குண்டுவெடிக்கும் என்று பேசிவிட்டு இணைப்பை துண்டித்து உள்ளார். 
அந்த செல்போன் எண்ணும், சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த எண்ணும் ஒரே எண் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது சேலத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
நட்சத்திர ஓட்டல்
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த செல்போன் எண் சேலம் இரும்பாலை அருகே சித்தனூர் பகுதியில் சிறிய ஓட்டல் நடத்தி வரும் கிருஷ்ணன் மனைவி ராணி (வயது 55) என்பவருடையது என தெரிந்தது. கணவன், மனைவி இருவரிடமும் விசாரணை நடத்திய போது சில நாட்களுக்கு முன்பு அவர்களது செல்போன் திருட்டுபோனது தெரிந்தது. ஓட்டலுக்கு வந்த மர்ம நபர் செல்போனை திருடி அதன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
பின்னர் அந்த செல்போன் எண் மாமாங்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் பகுதியில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த செல்போன் எண்ணை வைத்திருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த பிரேம்ராஜ் நாயர் (46) என்பதும், அவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
விமானப்படை முன்னாள் ஊழியர்
இது குறித்து போலீசார் கூறும்போது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரேம்ராஜ்நாயர் நேற்று முன்தினம் சேலம் ஜங்ஷன் முல்லை நகர் பகுதியில் உள்ள ஒரு கடையில் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துள்ளார். இதையடுத்து செல்போன் கோபுரம் மூலம் கண்காணித்த போது அவர் மாமாங்கம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து நாங்கள் அவரை கைது செய்து உள்ளோம்.
கேரளாவை சேர்ந்த பிரேம்ராஜ் நாயர், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விமானப்படையில் பிசியோதெரபிஸ்டாக கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து உள்ளார். பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு முந்திரி பருப்பு ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு உள்ளார். அதில் அவருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். 
சேலம் மட்டுமின்றி கேரள முதல்-மந்திரி, கேரள கவர்னர் மாளிகை, போலீஸ் டி.ஜி.பி., திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் அலுவலகம் என 40-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பிரேம்ராஜ் நாயர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து உள்ளார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Next Story