கோவில்பட்டியில் இருந்து சென்னை வந்து மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது
கோவில்பட்டியில் இருந்து சென்னை வந்து மூதாட்டிகளை குறிவைத்து நகை, பணம் திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பூர்,
வடசென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளான வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் பஸ்சில் தனியாக வரும் பெண்களை குறிவைத்து திருட்டு கும்பல் நகைகளை திருடி வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இந்த நிலையில் அந்த கும்பலை பிடிக்க வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், வண்ணாரப்பேட்டை போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆனந்தகுமார், முகமது நாசர், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் திருட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில், இதில் சில பெண்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்கள் ஷேர் ஆட்டோ மற்றும் பஸ்சில் தனியாக வரும் பெண்கள், மூதாட்டிகளிடம் கனிவாக பேச்சு கொடுத்து கவனத்தை திசை திருப்பி அவர்களிடம் இருக்கும் நகைகள் மற்றும் பணத்தை நூதன முறையில் திருடி செல்வது தெரியவந்தது.
இந்த நிலையில், திருட்டு சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த அனைத்து கண்காணிப்பு கேமரா பதிவுகளிலும் சந்தேகத்துக்கிடமான 3 பெண்களின் உருவம் பதிவாகி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சாந்தி (வயது 35), கவுரி (41), சின்னத்தாய் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலை சென்னை வந்திறங்கியதும், வடசென்னை பகுதியான வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, திருவொற்றியூர், பாரிமுனை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் பஸ்களில் செல்லும் பெண்களிடம் கவனத்தை திசைதிருப்பி நூதன முறையில் நகை, பணம் திருடி சென்றுள்ளனர்.நகையை திருடிய உடன் அன்று மாலையே சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று விடுவதையும், மீண்டும் மறுவாரம் இதுபோல் சென்னை வந்து திருடிச்செல்வதை வழக்கமாக வைத்திருந்ததையும் அவர்கள் ஒத்துக்கொண்டனர். இவர்கள் 3 பேரையும் வண்ணாரப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 14 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் 3 மீதும் சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் கைவரிசை காட்டிய வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
Related Tags :
Next Story