கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜரானார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். அதனால் சசிக்குமாரை கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து இருந்தனர்.
அதன்பேரில், ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தற்போதைய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆஜரானார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி தங்கமாரியப்பன் தள்ளிவைத்தார்.
இதே போன்று பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட மேலும் 2 வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. அந்த வழக்குகளிலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
Related Tags :
Next Story