கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் சத்யா தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் பாவடைராயன், ஆனந்தன், தாலுகா தலைவர் சக்திவேல், செயலாளர் ராஜா, பொருளாளர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்று வந்த ரெயில் கட்டண சலுகை பறிக்கப்பட்டுள்ளது. அவற்றை உடனே வழங்கிட வேண்டும்.
யூனியன் பிரதேசங்களில் வழங்குவதை போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோலுக்கான மானியம் வழங்கிட வேண்டும்.
ரெயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும், பிளாட்பார கட்டணம் ரூ.50 என்பதை கைவிட வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story