தோஷம் கழிக்கவும் பாலீஷ் போடவும் வரும் மர்ம நபர்களிடம் நகைகளை கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை


தோஷம் கழிக்கவும் பாலீஷ் போடவும் வரும் மர்ம நபர்களிடம் நகைகளை கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம்  கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2021 3:57 PM GMT (Updated: 11 Aug 2021 3:57 PM GMT)

தோஷம் கழிப்பதாகவும் பாலீஷ் போட்டு தருவதாகவும் கூறி வரும் மர்ம நபர்களிடம் நகைகளை கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

மர்ம நபர்கள்

தமிழகத்தின் சில இடங்களில் நகைகளை பாலீஸ் செய்து தருவதாக கூறி மர்ம நபர்கள் பொதுமக்களை ஏமாற்றி நகைகளை திருடிச் செல்லும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். 
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாகவும், தோஷம் கழிப்பதாகவும் கூறி வரும் மர்ம நபர்களிடம் நகைகளை கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம். மேலும் தோஷம் கழிப்பதாக கூறி சில நபர்கள் வீட்டிற்குள் வந்து வீட்டில் உள்ளவர்களின் கவனத்தை திசைத்திருப்பி நகைகளை பறித்துச் செல்லக்கூடும். மேலும் முதியோர்களுக்கு குளிர்பானங்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஏமாற்றி நகைகளை திருடி வருகின்றனர். 

உதவிசெய்வது போல் நடித்து

பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு நடந்து செல்லும் போது அந்த நகைகளை புடவையால் மூடி செல்ல வேண்டும். பஸ்களில் பயணம் செய்யும்போது அணிந்திருக்கும் நகைகளை கழட்டி கைப்பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். செம்பு பாத்திரத்தை பாலீஷ் செய்து தருவதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடிச் செல்ல கூடும்.
தனியாக செல்லும் பெண்களின் எதிரே திருடர்கள் இருக்கிறார்கள். தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி உங்கள் பையில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உதவி செய்வதை போல் நடித்து உங்கள் நகைகளை திருடிச் செல்ல கூடும். 

கண்காணிப்பு கேமரா

முடிந்தவரை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கண்காணிப்பு கேமராவை கண்டிப்பாக பொருத்த வேண்டும். இருசக்கர வாகனங்களை வீட்டின் வெளியில் நிறுத்தும்போது பூட்டி செல்ல வேண்டும். வங்கிகளில் பணம் எடுத்து வரும்போது மர்ம நபர்கள் உங்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதால் சந்தேக நபர்கள் கூறும் எதையும் நம்பக்கூடாது. 
எனவே பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் பகுதியில் சந்தேகப்படும் படியான நபர்களை கண்டால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலயத்துக்கோ அல்லது 100 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story