கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்; கம்பம்மெட்டில் பரபரப்பு


கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்; கம்பம்மெட்டில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Aug 2021 10:07 PM IST (Updated: 11 Aug 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டில் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கம்பம்:
தமிழக-கேரள எல்லையான கம்பம்மெட்டில் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். 
தோட்ட தொழிலாளர்கள்
தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையம், கோம்பை, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்குட்பட்ட குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், அடிமாலி, கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏலக்காய், காபி தோட்டங்களுக்கு வேலைக்கு ஜீப்களில் சென்று வருகின்றனர். 
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கேரள மாநில சுகாதாரத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லைகளான போடிமெட்டு, குமுளி, கம்பம்மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்ல கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று இல்லை என பெறப்பட்ட சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றுகள் இருந்தால் மட்டுமே கேரள போலீசார் அனுமதித்து வருகின்றனர். 
காத்திருப்பு போராட்டம்
இந்தநிலையில் நேற்று காலை 5 ஜீப்களில் 40-க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள், கொரோனா முதல் தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழுடன் தோட்ட வேலைக்கு சென்றனர். அப்போது கம்பம்மெட்டு சோதனை சாவடியில் இருந்த கேரள போலீசார், அந்த ஜீப்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் 2 தடுப்பூசி போட்டதற்கான சான்று அல்லது கொரோனா பாதிப்பு இல்லை என பெறப்பட்ட சான்று இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று கூறி, அவர்களை திரும்பி செல்லுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த தோட்ட தொழிலாளர்கள் கம்பம்மெட்டில் உள்ள தமிழக சோதனை சாவடி அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு மாநில அதிகாரிகளிடம் பேசி தடையின்றி தோட்ட வேலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு தோட்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். 

Next Story