ஆடிப்பூரத்தையொட்டி 2 லட்சம் வளையல்களால் மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
சிறப்பு அலங்காரம்
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணியளவில் கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம் தேன், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு 2 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜையில் பூசாரிகள் மட்டும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆடிப்பூர விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் வடிவேல் பூசாரி, செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி, ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் கோவிந்தராஜி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story