லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின் வெள்ளகோவில் அருகே உள்ள கல் உடைக்கும் ஆலை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
வெள்ளகோவில்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின் வெள்ளகோவில் அருகே உள்ள கல் உடைக்கும் ஆலை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர்
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் முறைகேடு செய்ததாக கவர்னரிடம் தி.மு.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மேலும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் அவர் மீது நடவடிக்கை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்னையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான கே.சி.பி. என்ஜினியர்ஸ் நிறுவனம் உள்பட 60 இடங்களில் ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் பணம், முக்கிய ஆவணங்கள் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அந்தவகையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா வெள்ளகோவில் ஒன்றியம் வேலூர் கிராமத்தில் உள்ள கே.சி.பி. என்ஜினீயரிங் நிறுவனத்திற்கு சொந்தமான வி.எஸ்.ஐ. சாண்ட் என்ற பெயரில் கல் உடைக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் 5 பேர் நேற்று மதியம் 2 மணிக்கு வந்தனர்.
சோதனை
லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு வந்தபோது தொழிலாளர்கள் யாரும் இல்லை. காவலாளி மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள அலுவலகத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை செய்தனர். 6 மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இவற்றை லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து சென்றதாக தெரிகிறது. கல் உடைக்கும் தொழிற்சாலையில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story