கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
வேடசந்தூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான 2 மாணவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
வேடசந்தூர்:
பள்ளி மாணவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலை தெருவை சேர்ந்தவர் அப்பாஸ். இவருடைய மகன் ரஜாக் (வயது 11). இவன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவனுடைய நண்பன் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் குமார் (12). இவன் அந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம், வேடசந்தூர் அருகே உள்ள தாத்தான்குளத்துக்கு நடந்து வந்தனர். அந்த பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த நீரில் குளிக்க முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி பாறை மீது வைத்து விட்டு குட்டையில் இறங்கினர்.
தீயணைப்பு படையினர் தேடும் பணி
இந்த நிலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர். இதற்கிடையில் தாத்தான்குளம் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையின் கரையோரத்தில் 2 பேரின் ஆடைகளும் கிடப்பதை பார்த்தனர். அவர்கள் இருவரும் குட்டையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் போஸ் தலைமையில் தீயணைப்பு படைவீரர்கள் நேற்று முன்தினம் இரவு குட்டையில் இறங்கி தேடினர். ஆனால் அவர்கள் உடல்கள் கிடைக்கவில்லை. இரவு நேரமானதால் தேடும் பணியும் நிறுத்தப்பட்டது.
உடல்கள் மீட்பு
பின்னர் நேற்று காலையில் தீயணைப்பு படைவீரர்கள் குட்டையில் இறங்கி மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில் தண்ணீரில் மூழ்கி பலியான மாணவர்கள் 2 பேரின் உயிரற்ற உடல்களை மீட்டனர். அதை பார்த்து மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவலறிந்த கூம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மாணவர்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story