விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை


விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 11 Aug 2021 10:40 PM IST (Updated: 11 Aug 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை அருகே விஷம் குடித்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். மரண தருவாயிலும் இறுதிச்சடங்குக்கு ரூ.40 ஆயிரத்தை வழங்கி அந்த தம்பதி நெகிழ வைத்தனர்.

திண்டுக்கல் : 

  குழந்தை இல்லாத தம்பதி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள கணவாய்பட்டியை சேர்ந்தவர் தொத்தன் (வயது 65). அவருடைய மனைவி வீராயி (60). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாறை அருகே உள்ள மலைக்கிராமமான மஞ்சள்பரப்பு கிராமத்துக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, கடந்த 2 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வந்தனர். 

தொத்தன் அப்பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் வேலை செய்தார். வீராயி, 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார். வயது முதுமை காரணமாக, வேலைக்கு செல்ல முடியாமல் 2 பேரும் அவதிப்பட்டனர். இதனால் மனம் உடைந்த கணவன்-மனைவி தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

இறுதிச்சடங்குக்கு ரூ.40 ஆயிரம்
அதன்படி நேற்று 2 பேரும் அரளி விதைகளை (விஷம்) அரைத்து குடித்தனர். இதில் வீராயி வாந்தி எடுத்தார். இதனைக்கண்ட பக்கத்து வீட்டுக்காரர் அந்தோணி அங்கு சென்று பார்த்தார்.

அப்போது தாங்கள் 2 பேரும் அரளி விதைகளை அரைத்து குடித்து விட்டதாகவும், தங்களை காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அவர்கள் கூறினர். மேலும் தாங்கள் இறந்த பிறகு தங்களை ஒரே இடத்தில் புதைக்க வேண்டும் அல்லது எரிக்க வேண்டும் என்றும் உருக்கமாக தெரிவித்தனர்.

மரண தருவாயில் இருந்த போதிலும் அந்த தம்பதி, தங்களது இறுதிச்சடங்கு செலவுக்கு யாரையும் தொல்லைப்படுத்த விரும்பவில்லை. எனவே தாங்கள் வைத்திருந்த ரூ.40 ஆயிரத்தை இறுதிச்சடங்கு செலவுக்கு வைத்து கொள்ளுமாறு அந்தோணியிடம் அவர்கள் கொடுத்தனர். பணத்தை பெற்று கொண்ட அந்தோணி நெகிழ்ச்சி அடைந்தார்.

 2 பேர் பரிதாப சாவு
இதற்கிடையே சிறிதுநேரத்தில் வீராயி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய தொத்தனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
 இதுகுறித்து தகவல் அறிந்த தாண்டிக்குடி போலீசார், கணவன்-மனைவி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தொத்தன், வீராயி ஆகியோர் நேற்று காலை வத்தலக்குண்டுவுக்கு சென்று வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. வயது முதுமை காரணமாக, தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்பாறை பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story