உடல்கள் தோட்டத்தில் புதைப்பு


உடல்கள் தோட்டத்தில் புதைப்பு
x
தினத்தந்தி 11 Aug 2021 11:31 PM IST (Updated: 11 Aug 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

மூலனூர் அருகே 2 பேரை கொன்று உடலை எரித்து எலும்புகளை தோட்டத்தில் புதைத்த விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரர் கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார்.

மூலனூர்
 மூலனூர் அருகே 2 பேரை கொன்று உடலை எரித்து எலும்புகளை தோட்டத்தில் புதைத்த விவகாரத்தில் முன்னாள் ராணுவ வீரர் கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
முன்னாள் ராணுவ வீரர்
திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் முத்துசாமிவயது 70 இவர் அந்த பகுதியில் நர்சரி பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக இவருடைய மனைவி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இவர்களுடைய மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 
முத்துசாமிக்கு மூலனூர் மற்றும் கிளாங்குண்டல் பகுதியில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு சாகுபடி செய்து வருகிறார். இதனால் முத்துசாமி மட்டும் தனியாக வசித்து வந்தார். இவருடைய தோட்டத்தில் விவசாய வேலையை கவனிக்க சுள்ளிபெருக்கபாளையத்தை சேர்ந்த ரவி 48மற்றும் அவருடைய மனைவி அம்சா என்கிற அம்சவேணி 47ஆகியோரை நியமித்துள்ளார். தம்பதி இருவரும் முத்துசாமியின் தோட்டத்தில் வேலை செய்தனர். 
 மேலும் சுள்ளிபெருக்கபாளையத்தில் உள்ள முத்துசாமியின் தோட்டத்தின் அருகில் அதே ஊரை சேர்ந்த வேலுச்சாமியின் 53 தோட்டம் உள்ளது. இந்த நிலையில் தோட்டத்திற்கு சென்ற வேலுச்சாமியை கடந்த ஓராண்டாக காணவில்லை என்று அவருடைய சகோதரி சரஸ்வதி மூலனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இது தொடர்பாக முத்துசாமியின் தோட்டத்தில் வேலை செய்த ரவி மற்றும் அவருடைய மனைவி அம்சவேணி ஆகியோரை போலீசார் விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் கடந்த 8 மாதங்களாக ரவியையும் காணவில்லை. இதையடுத்து தனது கணவர் ரவியை காணவில்லை என்று அம்சவேணி மூலனூர் போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ரவியையும் தேடி வந்தனர். ஆனாலும் ரவியை கண்டு பிடிக்க முடியவில்லை. 
கொலை 
இந்த நிலையில் கடந்த மாதம் தாராபுரம் பகுதியில் நடந்த ஒரு கொலை தொடர்பாக விசாரணை நடத்த போலீசார் மூலனூர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது பல்வேறு தரப்பினரிடம் போலீசார் விசாரித்தபோது அவர்களுக்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது. சுள்ளிபெருக்கபாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி மற்றும் ரவி ஆகியோர் காணாமல் போனது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் முத்துசாமி மற்றும் அவருடைய தோட்டத்தில் வேலை பார்த்த அம்சவேணியை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து முத்துசாமியையும், அம்சவேணியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் வேலுச்சாமி மற்றும் ரவியை கொலை செய்து எரித்து விட்டதாகவும், கொலைக்கு உடந்தையாக அம்சவேணி இருந்ததாகவும் முன்னாள் ராணுவ வீரர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைதான முத்துசாமி போலீசில் கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு
எனது தோட்டத்திற்கு பக்கத்து தோட்டத்தை சேர்ந்த வேலுச்சாமி  அடிக்கடி வருவார். அதை பயன்படுத்தி எனது தோட்டத்தில் இருந்த ஆடு மற்றும் தோட்டத்தில் உள்ள பொருட்களை திருடி சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரை கொன்று எரித்து உடலை தோட்டத்தில் புதைத்து விட்டேன். இந்த கொலைக்கு தோட்டத்தில் வேலை பார்த்த ரவியின் மனைவி அம்சவேணி உடந்தையாக இருந்தார். 
உல்லாசம்
இதற்கிடையில் அம்சவேணிக்கும் எனக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அடிக்கடி தோட்டத்தில் உல்லாசமாக இருப்போம். இந்த விவரம் ரவிக்கு தெரிந்துவிட்டது. மேலும் வேலுச்சாமியை கொலை செய்த விவரத்தையும், அம்சவேணி அவருடைய கணவர் ரவியிடம் கூறியுள்ளார்.  இந்த தகவலை கேட்ட ரவி குடிபோதையில்  ஊர் பொதுமக்களிடம் வேலுச்சாமியை முன்னாள் ராணுவ வீரர் முத்துசாமி கொன்று எரித்து உடலை புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதை வைத்து ரவி அடிக்கடி என்னை மிரட்டி பணம் பறித்து வந்தார். 
இந்த நிலையில் ரவியின் உறவினர்கள் ரவியிடம் உனது மனைவியை முத்துசாமிக்கு தாரைவார்த்துக்கொடுத்து விட்டு இங்கு வந்து நடிக்காதே என்று கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ரவி மறுநாள் சுள்ளிபெருக்கபாளையம் தோட்டத்திற்கு வந்தார். பின்னர் அங்கு என்னை வழிமறித்து தாக்கினார்.
இதனால் ரவியை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி ரவியை தோட்டத்திற்கு வரவழைத்தேன். பின்னர் நானும் எனது கள்ளக்காதலி அம்சவேணியும் சேர்ந்து ரவியை கொன்று தோட்டத்தின் அருகே உள்ள ஓடையில் தீ வைத்து எரித்தோம். பின்னர் எஞ்சிய எலும்புகளை எனது தோட்டத்தில் புதைத்தோம். 
பின்னர் நாங்கள் எதுவும் நடக்காதது போல் இருந்து விட்டோம். அதன்பின்னர் நான்தான் அம்சவேணியை தனது கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்க சொன்னேன். அவளும் போலீசில் புகார் கொடுத்து விட்டு எதுவும் நடக்காதது போல் நடித்தாள். அதன்பின்னர் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தோஷமாக இருந்தோம். இந்த நிலையில் போலீசில் சிக்கிக்கொண்டோம்.
இவ்வாறு முத்துசாமி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
உடல்கள் தோண்டி எடுப்பு
 இதையடுத்து தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு மூலனூர் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொலையான வேலுச்சாமி மற்றும் ரவி ஆகியோர் புதைக்கப்பட்ட இடத்தை முத்துசாமி அடையாளம் காட்டினார். இந்தநிலையில் கோவையிலிருந்து சட்டம் சார்ந்த மருத்துவத்துறை பேராசிரியர் ஜெய் சிங் மருத்துவர்கள் பேரானந்தம் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். 
அவர்கள் பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி எடுத்து அங்கு கிடைத்த எலும்புகளை ஆய்வின் முடிவிற்காக கோவை மருத்துவ கல்லூரி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கைதான முத்துசாமி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலி அம்சா என்ற அம்சவேணியையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

-

Next Story