மளிகைக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
கோத்தகிரி அருகே மளிகைக்கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளார்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள எஸ்.கைக்காட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா என்ற லோகராஜ்(வயது 46). அதே கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது கூலி வேலைக்கும் செல்வது வழக்கம். இவருக்கு திருமணமாகி பானுமதி(35) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு 8 மற்றும் 5 வயது உடைய பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் லோகராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் வீட்டுக்கு வரும்போது அவரை பானுமதி கண்டித்து வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்படுவது உண்டு. இது சில சமயங்களில் போலீஸ் விசாரணை வரை சென்று உள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட பானுமதி, புதுக்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் லோகராஜ் மனமுடைந்து காணப்பட்டார். இதன் காரணமாக நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் லோகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story