உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை வீசிச்சென்ற மர்ம ஆசாமிகள்
கூடலூர்-மைசூரு சாலையோரத்தில் உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை வீசிச்சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்,
கூடலூர்-மைசூரு சாலையோரத்தில் உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை வீசிச்சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலையோரத்தில் கோழிக்குஞ்சுகள்
கர்நாடகா, கேரளா, தமிழகம் என 3 மாநிலங்களை இணைக்கும் பகுதியில் கூடலூர் நகரம் உள்ளது. இங்கு வாகன போக்குவரத்து அதிகம். குறிப்பாக கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு ஏராளமான சரக்கு வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. இதை பயன்படுத்தி கூடலூர்-கேரள எல்லைகளில் சில சமயங்களில் கழிவுகள் கொட்டப்பட்டது. பின்னர் போலீசார், சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியதால், அந்த செயல்கள் குறைந்தது.
இந்த நிலையில் கூடலூர்-மைசூரு செல்லும் சாலையோரம் உள்ள மாக்கமூலா என்ற இடத்தில் உயிரிழந்த கோழிக்குஞ்சுகள் வீசி செல்லப்பட்டு இருந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை காணப்பட்டது. இதை கண்ட பொதுமக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
கடும் நடவடிக்கை
இதைத்தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது 500-க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகளை மர்ம ஆசாமிகள் வாகனங்களில் கொண்டு வந்து வீசிச்சென்றது தெரியவந்தது. ஆனால் கோழிக்குஞ்சுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தெரியவில்லை.
பின்னர் கூடலூர் பகுதியில் உள்ள சில பண்ணைகளில் நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் கூறும்போது, உயிரிழந்த கோழிக்குஞ்சுகளை வீசி சென்றது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story