கொரோனா தொற்று இல்லா மாவட்டமாக கரூர் உருவாகும்


கொரோனா தொற்று இல்லா மாவட்டமாக கரூர் உருவாகும்
x
தினத்தந்தி 12 Aug 2021 12:15 AM IST (Updated: 12 Aug 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லா மாவட்டமாக கரூர் உருவாகும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கரூர்
களஆய்வு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பெரிய வளையப்பட்டி துணை சுகாதார நிலையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயதீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அதனைத்தொடர்ந்து கரூர் பிரேம் மகாலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டு 2,424 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
கொரோனா தடுப்பூசி முகாம்
கரூர் நகராட்சி திருமண மண்டபத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் பெருநிறுவனங்களின் சமூக பொறுப்பு உணர்வு நிதியின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் 26 பெரு நிறுவனங்களிடம் சமூக பொறுப்பு நிதி ரூ.1.59 கோடி மதிப்பிலான காசோலைகளை பெற்று இத்திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
இதனைதொடர்ந்து கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவை திறந்து வைத்து பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 
தொற்று இல்லா மாவட்டம்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்து 465 ஆக இருந்தது. கரூரில் 265 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். மே மாதம் 21-ந்தேதி தமிழகத்தில் 36,184 ஆக இருந்தது. மே 29-ந்தேதி கரூரில் 527 ஆக இருந்தது.
தமிழக முதல்-அமைச்சரின் தொடர் நோய்தடுப்பு முயற்சியால் கரூரில் நேற்றைய (நேற்று முன்தினம்) தினத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக குறைந்துள்ளது. மிக விரைவில் இதுவும் குறைந்து தொற்று இல்லாத மாவட்டங்களில் கரூரும் ஒன்று என்கிற அளவில் உருவாக இருக்கிறது. 
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை
மாநில அளவிலான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையின் போது ஏற்படுகிற தொற்று சதவீதம் 1.3 அளவிலே கடந்த 10 நாட்களாக இருந்து வருகிறது. மாநில அளவிலான சதவீதத்தை விட குறைவாக கரூரில் 0.9 சதவீதம் தொற்றுதான் உள்ளது. 1,700 ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் நாளொன்றுக்கு எடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.
2-ம் அலையின் தாக்கத்தின்போது கரூரில் ஆயிரக்கணக்கான புதிய படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் என கரூரின் தேவை தன்னிறைவு பெறுகிற வகையில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு
3-ம் அலை குழந்தைகளை தாக்கும் என சொல்லப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு கொண்டிருக்கிறது.அந்தவகையில் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 15 வெண்டிலேட்டர் வசதிகள் உடைய 100 படுக்கைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கரூரில் இருந்த மாவட்ட அரசு மருத்துவமனை முடங்கி உள்ளது. முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த மருத்துவமனையை அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மாவட்ட அரசு மருத்துவமனையாக இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
மாணவர் சேர்க்கை
தமிழக முதல்-அமைச்சர், பிரதமரை சந்தித்த போது 11 மருத்துவக்கல்லூரிகளுக்கும் உடனடியாக ஆய்வை மேற்கொள்ள செய்து மாணவர் சேர்க்கைக்கு இந்தாண்டே உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி நானும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் நேரடியாக சென்று மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம். இதுவரை 9 மருத்துவக்கல்லூரிகளுக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போதுகூட நீலகிரி மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். பின்னர் திருவள்ளூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் ஆய்வு கொள்ள இருக்கிறார்கள். 11 மருத்துவக்கல்லூரிகளும் ஆய்வுக்கு பிறகு மாணவர் சேர்க்கை என்பது உறுதிபடுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story