மலைப்பாதை தடுப்பு சுவரில் மினி வேன் மோதி டிரைவர் பலி
தடுப்பு சுவரில் மினி வேன் மோதி டிரைவர் பலி
பேரணாம்பட்டு
ஆந்திர மாநிலம் நாய்க்கனேரி கிராமத்திலிருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மாங்காய் பாரம் ஏற்றிய மினி வேன் சென்றது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பொம்பூர் கிராமத்தை சேர்ந்த உத்தர மூர்த்தி (வயது 31) என்பவர் மினி வேனை ஓட்டிச்சென்றார். பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி மலைப்பாதையில் வந்தபோது மலைப்பாதை முதல் வளைவில் திரும்ப முயன்றபோது மினி வேன் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்க தடுப்பு சுவரில் மோதியது. இதில் மினி வேனின் முன்பக்கம் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி டிரைவர் உத்தரமூர்த்தி பலத்த காயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அண்ணா நகரைச் சேர்ந்த கிளீனர் ஆறுமுகம் (51) படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் சென்று தீயணைப்பு படையினர் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த உத்தரமூர்த்தியின் உடலை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிர் தப்பிய கிளீனர் ஆறுமுகம் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story