சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை


சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 11 Aug 2021 7:56 PM GMT (Updated: 11 Aug 2021 7:56 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

சின்ன வெங்காயம் 

தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், இலத்தூர், சீவநல்லூர், அச்சன்புதூர், பாவூர்சத்திரம், ஆலங்குளம், ஆய்க்குடி, சாம்பவர்வடகரை, கொடிக்குறிச்சி, பண்பொழி, பொய்கை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
இந்த ஆண்டு உரிய நேரத்தில் மழை பெய்ததால் இந்த பகுதிகளில் அதிகளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டது. அதிகளவில் விளைச்சலும் ஏற்பட்டு, ஏக்கர் ஒன்றுக்கு 5 டன் முதல் 6 டன் வரை மகசூல் கிடைத்தது. 

விலை வீழ்ச்சி

ஆனால், விலையை பொறுத்த வரை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.20 முதல் ரூ.25-க்கு தான் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். 
இதனால் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்பில் இருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். செலவழித்த பணம் கூட கிடைக்காததால் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

காரணம் என்ன?

இந்த பகுதிகளில் விளையும் சின்ன வெங்காயம் அண்டை மாநிலமான கேரளாவுக்கு அதிகளவில் அனுப்பப்படும். தற்போது அங்கு கொரோனா ஊரடங்கு காரணமாக, சின்ன வெங்காயம் அனுப்பப்படுவது குறைந்து விட்டது. மேலும், சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து உள்ளது. இதுபோன்ற காரணங்களால் அதன் விலை குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடையநல்லூர் மார்க்கெட் காய்கறி வியாபாரி சீத்தாராமன் கூறியதாவது:-
கடையநல்லூர் தாலுகா பகுதியில் வெங்காயம் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. தற்போது சின்ன வெங்காயம் அறுவடை சீசன் என்பதால் சந்தைக்கு அதிகளவில் வரத்து உள்ளது. இதனால் சின்ன வெங்காயம் படிப்படியாக விலை குறைந்து கிலோ ரூ.18 முதல் 26 வரை விற்பனையாகிறது. வரும் காலங்களில் வரத்து அதிகரிப்பது தொடா்ந்தால் மேலும் விலை வீழ்ச்சி அடையக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார். 

ேநரடி கொள்முதல்

கடையநல்லூரை சோ்ந்த விவசாயி அவுசாரி முகம்மது யூசுப் கூறியதாவது:-
ஒரு ஏக்கா் நடவுக்கு 600 கிலோ விதை சின்ன வெங்காயம் தேவைப்படுகிறது. மேலும் உரம், மருந்து, நடவு, பராமரிப்பு, களையெடுப்பு, அறுவடை என்று உற்பத்தி செலவு ரூ.1 லட்சம் ஆகிறது. ஆனால், தற்போது சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், செலவழித்த தொகையை கூட பெற முடியாத நிலையில் உள்ளோம்.
ஒரு கிலோ சின்ன வெங்காய உற்பத்திக்கு ரூ.30 வரை செலவு ஆகிறது. ஆனால், எங்களிடம் வியாபாரிகள் ரூ.20 முதல் ரூ.25-க்கு தான் கொள்முதல் செய்கின்றனர். இதனால் அதிகளவில் நஷ்டம் அடைந்து உள்ளோம். எனவே, விவசாயிகளிடம் இருந்து கூடுதல் விலைக்கு அரசே நேரடியாக சின்ன வெங்காயத்ைத கொள்முதல் செய்ய வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story