வரலாற்றில் அழியாத புகழ்கொண்ட மாமன்னன் ராஜேந்திர சோழன்


வரலாற்றில் அழியாத புகழ்கொண்ட மாமன்னன் ராஜேந்திர சோழன்
x
தினத்தந்தி 12 Aug 2021 1:33 AM IST (Updated: 12 Aug 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

வரலாற்றில் அழியாத புகழ்கொண்டவராக மாமன்னன் ராஜேந்திரன் சோழன் திகழ்கிறார்.

மீன்சுருட்டி:

கங்கைக்கரை வரை வெற்றிக்கொடி
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழப்பேரரசர் ராஜராஜ சோழனின் மகனான முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது ஆகும். தந்தையை போல் அழியாத கீர்த்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன், கங்கை நதி வரை படை அனுப்பி வெற்றிக்கொடி நாட்டியவர்.
இதைத்தொடர்ந்தே இப்பகுதி கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயர் பெற்றதாகவும், கங்கை நதி நீரை கொண்டு வந்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் ராஜேந்திர சோழன் தனது ஆயுட்காலத்தில் சுமார் 65 ஆண்டுகளை போர்க்களத்திலேயே கழித்துள்ளார்.
கடல் கடந்தும் சோழ சாம்ராஜ்ஜியம்
சோழ சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்த ஒரே மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. மேலும் கடல் கடந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, மியான்மர், தாய்லாந்து, கம்போடியா போன்ற உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்து, உலகின் கடல் வாணிபத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது ராஜேந்திர சோழன் மட்டுமே என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின் 265 ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டுள்ளதாக வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கின்றன.
சிறப்புமிக்க பிரகதீஸ்வரர் கோவில்
தஞ்சை பெரிய கோவிலை போன்று நிலைத்த புகழுடன் திகழும் வகையில் கலைநயத்துடன் மிக பிரமாண்டமாக பிரகதீஸ்வரர் கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். அக்கால போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. 13½ அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லில் ஆன மிகப்பெரிய சிவலிங்கம் தமிழகத்திலேயே இந்த கோவிலில்தான் உள்ளது.
இங்குள்ள துர்க்கை அம்மன் ராஜேந்திர சோழனின் குலதெய்வம் ஆகும். மிக அபூர்வ வடிவில் அந்த சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது. ராஜேந்திர சோழன் போருக்கு சென்று திரும்பியவுடன், கோவிலுக்கு சென்று துர்க்கை அம்மனை வழிபாடு செய்த பின்னரே சிவனை வணங்குவார் என்று சொல்லப்படுவது உண்டு. ஒரே கல்லில் ஆன நவக்கிரக பீடமும் இக்கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
கொண்டாட்டம்
இந்நிலையில் அழியாப்புகழ் பெற்ற மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

Next Story