முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன ஊழியர் கைது


முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2021 1:33 AM IST (Updated: 12 Aug 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்:
பெரம்பலூரில் நான்கு ரோடு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மூலம் பலர் மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்கு நிதி உதவி பெற்றுள்ளனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக அம்மாபாளையம், வன்னிமலைத் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் ரமேஷ் (வயது 27) வேலை பார்த்து வருகிறார். இவர், வாகனக்கடன் பெற்றவர்களிடம் நேரில் சென்று மாதத் தவணை (இ.எம்.ஐ.) தொகையை பெற்று நிதி நிறுவனத்தில் செலுத்துவது வழக்கம். இந்தநிலையில் அந்த நிதி நிறுவன மேலாளர், குரும்பலூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த அகிலா உள்பட சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த சில மாதமாக செலுத்த வேண்டிய தவணைத் தொகையை செலுத்துமாறு கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த அகிலா உள்ளிட்டோர் தவணைத் தொகையை மாதந்தோறும் ரமேஷிடம் செலுத்தி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நிதி நிறுவனத்தில் தவணைத் தொகையை செலுத்தாமல் முறைகேடு செய்த ரமேஷ் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தருமாறு அகிலா பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 3 மாதங்களில் 30-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2.70 லட்சம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், குற்றவியல் நீதி மன்றத்தில் ரமேஷ் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story