வியாபாரிகள் தி.மு.க.வினர் திடீர் மறியல்
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஏலம் நடந்தது. அப்போது வியாபாரிகள், தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்;
தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஏலம் நடந்தது. அப்போது வியாபாரிகள், தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழைய பஸ் நிலையத்தில் கடைகள்
தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.28 கோடியே 73 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த 2 இடங்களிலும் கடைகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளன.
இதில் பழைய பஸ் நிலையத்தில் மட்டும் 54 கடைகள் உள்ளன. இதில் 2 உணவகம் மற்றும் ஒரு ஏ.டி.எம். அலுவலக கட்டிடம் உள்ளன. திருவையாறு பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் இடிக்கப்பட்டு இது முற்றிலும் வணிக வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 39 கடைகள் உள்ளன. இதில் 8 உணவகமும் அடங்கும்.
ஏலம் விடப்பட்டது
இந்த கடைகளுக்கு பொது ஏலம் விடப்படுவதாக மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி கடைகளுக்கு டெபாசிட் தொகையாக ரூ.2 லட்சமும், உணவகத்துக்கு ரூ.5 லட்சமும் வரைவோலை எடுத்து மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரலாம் எனவும், 11-ந் தேதி பொது ஏலம் விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கடந்த சில நாட்களாக வியாபாரிகள், தாங்கள் விரும்பிய கடைகளின் எண்களை குறிப்பிட்டு, அதற்கான வாடகை தொகையை நிர்ணயம் செய்து ஒப்பந்தப்புள்ளி கோரினர். நேற்றும் காலை முதல் 11 மணி வரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் ஒப்பந்தப்புள்ளியை போடலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பழைய பஸ் நிலையம் மற்றும் திருவையாறு பஸ் நிலைய பகுதியில் கடைகள் வைத்திருந்த வணிகர்கள், தங்களுக்கு கடைகளை ஒதுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு கடைகளை ஊர்ஜிதம் செய்யக்கூடாது என உத்தரவிட்டு இருந்தது.
காலையிலேயே குவிந்தனர்
நேற்றும் காலை முதலே ஏராளமானோர் வரைவோலையுடன் மாநகராட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். ஒவ்வொருவரும் வரைவோலை மற்றும் ஆதார் கார்டு நகல், கடை எண் ஆகியவற்றை குறிப்பிட்டு அதற்கான வாடகை தொகையை நிர்ணயம் செய்து ஒப்பந்தபுள்ளி பெட்டியில் போட்டனர்.
மேலும் இது தொடர்பாக 2 நகல்களும் எடுத்து ஒன்றை தாங்கள் வைத்துக்கொள்வதுடன், மற்றொன்றை மாநகராட்சி வளாகத்தில் அமர்ந்திருந்த அதிகாரிகளிடமும் கொடுத்தனர்.
நீண்ட வரிசையில்
இதற்காக ஏராளமான வியாபாரிகள், வணிகர் சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். மாநகராட்சியின் நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டு வரைவோலை வைத்திருந்தவர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மாநகராட்சி அலுவலகம் முன்பும் எராளமானோர் குவிந்திருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறும், பொது ஏலம் 11 மணிக்கு நடைபெறுகிறது அப்போது வாருங்கள் என தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்கள் அங்கேயே நின்று கொண்டு இருந்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார் ஆகியோரும் அங்கு வந்து கூட்டமாக நிற்பவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு தெரிவித்தனர்.
சாலை மறியல்
இந்த நிலையில் 11 மணிக்கு ஏலம் தொடங்கியது. ஏலம் தொடர்பாக நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் வீடியோ மூலம் வெளியில் காத்திருந்தவர்களுக்கு திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதலில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடை ஒதுக்குவது தொடர்பாக ஏலமிடப்பட்டது. அப்போது வெளியே நின்று கொண்டிருந்த வணிகர்கள் மற்றும் பழைய பஸ்நிலையம், திருவையாறு பஸ் நிலையத்தில் முன்னதாக கடை வைத்திருந்த வியாபாரிகள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்களுக்கு மீண்டும் கடைகள் ஒதுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து வியாபாரிகள் மற்றும் தி.மு.க.வினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கோர்ட்டு உத்தரவை மதிக்காமல் ஏலம் நடைபெறுவதாகவும், ஏலமிடுவதை நிறுத்த வேண்டும், ஆணையரை மாற்ற வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story