முதியோர்கள் தடையில்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்க நடவடிக்கை


முதியோர்கள் தடையில்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2021 1:44 AM IST (Updated: 12 Aug 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

முதியோர்கள் தடையில்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர், 
முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் வள்ளி குட்டி ராஜா, பேபி காளிராஜன், ஜெயக்குமார் டி.ஜி.நாகேந்திரன், சுந்தர், ரமேஷ், பாண்டியராஜன் உள்ளிட்டோர் விருதுநகர் வட்ட வழங்கல் அலுவலரிடம் கொடுத்துள்ளமனுவில் கூறியிருப்பதாவது:- 
 விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. ரேஷன் கார்டுதாரர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் எந்திரத்தில் 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்தால் கைரேகை பதிவாவதில்லை. மேலும் நோய் பாதிப்பால் முதியோர்கள் ரேஷன் கடைக்கு நேரடியாக வரமுடியாத நிலையில் பொருட்களை வாங்க முடியாமல் உள்ளனர். இந்தநிலையில் ரேஷன் கடை ஊழியர்கள், முதியவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க மறுக்கின்றனர். இதனால் தனியே வாழ்ந்து வரும் முதியவர்கள் உண்ண உணவின்றி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. பலசரக்கு கடைகளில் கூடுதல் விலைக்கு பொருட்கள் வாங்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.  மேலும் மூன்று மாதங்கள் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காதநிலையில் ரேஷன் கார்டுகள் ரத்தாகிவிடும். இந்நிலையில் முதியவர்கள் அரசு வழங்கும் நிவாரண நிதி, பொங்கல் சிறப்பு தொகை உள்ளிட்ட நிவாரண உதவிகளை பெற முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே முதியவர்கள் ரேஷன் பொருட்களை அவர்களது உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் வாங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



Next Story