வேறு துறை கேட்டு போர்க்கொடி தூக்கிய ஆனந்த்சிங் ராஜினாமா முடிவை கைவிட்டார்
வேறு துறை கேட்டு போர்க்கொடி தூக்கிய மந்திரி ஆனந்த்சிங் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தை பூட்டியதால் அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக தகவல் வெளியானது. அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் சமரசம் செய்தனர். இதையடுத்து அவர் ராஜினாமா முடிவை கைவிட்டார்.
பெங்களூரு: வேறு துறை கேட்டு போர்க்கொடி தூக்கிய மந்திரி ஆனந்த்சிங் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தை பூட்டியதால் அவர் ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக தகவல் வெளியானது. அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா ஆகியோர் சமரசம் செய்தனர். இதையடுத்து அவர் ராஜினாமா முடிவை கைவிட்டார்.
மந்திரி சபை விரிவாக்கம்
எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை கடந்த ஜூலை 28-ந் தேதி பதவி ஏற்றார். அதன் பிறகு கடந்த 4-ந் தேதி மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அன்றைய தினம் 29 ேபர் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கடந்த 7-ந் தேதி இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் எடியூரப்பா மந்திரிசபையில் இடம் பெற்றிருந்தவர்களுக்கு மீண்டும் அதே இலாகா ஒதுக்கப்பட்டது. ஆனால் எடியூரப்பா மந்திரி சபையில் வனத்துைறயை நிர்வகித்த ஆனந்த்சிங்கிற்கு சுற்றுலா, சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டது.
ஆனந்த்சிங் அதிருப்தி
இதற்கு ஆனந்த்சிங் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கடந்த 8-ந் தேதி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பேசிய ஆனந்த்சிங், தனக்கு மின்சாரம் உள்ளிட்ட அதிகாரமிக்க பலமான துறையை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பரிசீலிப்பதாகவும், கட்சியின் முடிவை ஏற்குமாறும் முதல்-மந்திரி கூறியதாக தெரிகிறது. ஆனால் ஆனந்த்சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் முதல்கட்டமாக நேற்று முன்தினம் அவர் தனது வீட்டு வளாகத்தில் இருந்த எம்.எல்.ஏ. அலுவலகத்தை மூடினார். அங்கு வைக்கப்பட்டிருந்த தனது அலங்கார வளைவு பெயர் பலகையை அகற்றிவிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் வாழ்க்கை
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ேநற்று மந்திரி ஆனந்த்சிங், ஒசப்பேட்டேயில் உள்ள வேணுகோபால்சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். அதன் பிறகு அவர் முதல்-மந்திரியை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் பெங்களூரு புறப்பட்டு வந்தார். அவருடன் ராஜூகவுடா எம்.எல்.ஏ.வும் வந்தார். பெங்களூரு புறப்படும் முன்பு ஆனந்த்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 2008-ம் ஆண்டு எனது அரசியல் வாழ்க்கை இந்த கோவிலில் இருந்து தான் தொடங்கினேன். இதே இடத்தில் எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிடுமோ? என்னவோ தெரியவில்லை. ஒருவேளை வேணுகோபால்சாமியின் ஆசி இருந்தால் அரசியலில் நான் தொடர்ந்து இருக்கலாம். என்னை காப்பவர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்று நான் நம்பினேன். ஆனால் அது தவறானது என்று இப்போது எனக்கு புரிந்துள்ளது.
மன்னிப்பு கோரியுள்ளேன்
நான் எனது ஆசை, எதிர்பார்ப்புகளை கைவிட்டுவிட்டேன். ஆனால் தன்னம்பிக்கையை கைவிடவில்லை. கட்சிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தும் வகையில் நான் எந்த கருத்தையும் கூறவில்லை. என்ன சொல்ல வேண்டுமோ அதை முதல்-மந்திரியை நேரில் சந்தித்து கூறியுள்ளேன். அது என்ன என்பதை என்னால் உங்களிடம் கூற முடியாது.
என்னை வேணுகோபால்சாமி பாதுகாப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போதைக்கு அரசியல் தொடர்பாக எந்த கருத்தையும் கூற மாட்டேன். கடந்த 8-ந் தேதி எடியூரப்பாவை பெங்களூருவில் சந்தித்து பேசினேன். அவரிடம் எல்லா விஷயங்களையும் கூறியுள்ளேன். பா.ஜனதா தலைவர்கள் பலர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். அவர்களுக்கு உரிய பதிலை கூறியுள்ளேன். மன்னிப்பும் கோரியுள்ளேன்.
மிரட்டும் தந்திரம்
நான் பெரிய அரசியல்வாதி இல்லை. விஜயநகர் தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளேன். நல்ல இலாகாவை பெற மிரட்டும் தந்திரத்தை நான் பின்பற்றவில்லை. அரசியலில் 15 ஆண்டுகளும், சமூக சேவையில் 5 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளேன். எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது எனது கோரிக்கைகளை நிறைவேற்றினார். புதிய மாவட்டத்தை உருவாக்கி கொடுத்தார். நீர்ப்பாசன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.
நான் எந்த ஒரு சபதம் எடுப்பதாக இருந்தாலும், இந்த கோவிலுக்கு வந்து பூஜை செய்து எடுப்பது வழக்கம். அதனால் இன்று (நேற்று) இந்த கோவிலுக்கு வந்து பூஜை செய்து சபதம் எடுத்துள்ளேன்.
இவ்வாறு ஆனந்த்சிங் கூறினார்.
பசவராஜ் பொம்மை
ஆனந்த்சிங் விவகாரம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மந்திரி ஆனந்த்சிங் ஏற்கனவே என்னை நேரில் சந்தித்து தனது கருத்துகளை கூறினார். கட்சியின் நிலை குறித்தும் அவரிடம் எடுத்துக் கூறினேன்.
நீண்ட காலமாக நானும், அவரும் நல்ல நண்பர்கள். நாங்கள் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். நேற்று (நேற்று முன்தினம்) கூட அவரிடம் தொலைபேசியில் பேசினேன். இன்றும் (நேற்று) அவருடன் பேசுவேன். அவரது கருத்துகள் என்ன என்பது எனக்கு தெரியும்.
அவர் வந்து என்னை சந்தித்து பேசிய பிறகு அனைத்தும் சரியாகிவிடும். அவர் என்னை சந்தித்தபோது ராஜினாமா கடிதம் வழங்கவில்லை. நாங்கள் கருத்துகளை மட்டுமே பரிமாறிக் கொண்டோம். நான் அவரை அழைத்து பேசுவேன். அவர் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் என்னிடம் முறைப்படி பேசுவார். நான் அவரிடம் பேசுேவன்.
பிரச்சினை இல்லை
நாளை (அதாவது இன்று) வந்து என்னை சந்திப்பதாக கூறினார். நான் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்று கூறினேன். அதனால் அவர் இன்றே (நேற்று) வந்து என்னை சந்திப்பதாக கூறியுள்ளார். நானும் அவரை வருமாறு கூறியுள்ளேன். மந்திரி எம்.டி.பி.நாகராஜிடம் பேசினேன். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
அவசரபட வேண்டாம்
மந்திரி பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், ஆனந்த்சிங் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளதால் பசவராஜ் பொம்மை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நேராக காவேரி இல்லத்திற்கு வந்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அவருக்கு எடியூரப்பா அறிவுரை கூறினார்.
அந்த சந்திப்பை முடித்து கெண்டு, ஆனந்த்சிங் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் இரவு 7 மணியளவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் ஆனந்த்சிங் ஆகியோர் ரகசிய இடத்தில் சந்தித்து பேசினர்.
ராஜினாமா முடிவை கைவிட்டார்
இந்த சந்திப்பின்போது, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், ராஜூகவுடா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது பசவராஜ் பொம்மை, அவசரப்பட வேண்டாம், கட்சி மேலிட தலைவர்களுடன் பேசி உரிய முடிவு எடுப்பதாக உறுதியளித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு பேசிய ஆனந்த்சிங், நான் ராஜினாமா செய்வதாக கூறவில்லை. நான் வேறு இலாகா கேட்டு தான் கோரிக்கை விடுத்து வருகிறேன். எனக்கு வேறு துறை ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.
இதுகுறித்து பசவராஜ்பொம்மை கூறுகையில், ஆனந்த்சிங்கின் அவரது உணர்வுகளை என்னிடம் கூறினார். அவரது பிரதான கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளோம். எந்த குழப்பமும் இல்லை என்றார்.
எடியூரப்பா, பசவராஜ்பொம்மை வேண்டுகோளை ஏற்று ராஜினாமா முடிவை ஆனந்த் சிங் கைவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story