மேகதாது திட்டம்: குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை; பசவராஜ் பொம்மை பேட்டி


மேகதாது திட்டம்: குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை; பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 11 Aug 2021 9:20 PM GMT (Updated: 11 Aug 2021 9:20 PM GMT)

மேகதாது திட்டத்தில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அண்டை மாநிலங்களின் அனுமதி தேவை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு: முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீர்ப்பாசனத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டத்தை பெங்களூருவில் நேற்று நடத்தினார். இதில் அந்த துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மேகதாது திட்டத்திற்கு காவிரி ஆறு ஓடும் மாநிலங்களின் ஒப்புதல் தேவை என்று மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கூறியுள்ளார். குடிநீர் திட்டங்களை செயல்படுத்த தமிழகத்தின் அனுமதி தேவை இல்லை. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜல்சக்தித்துறை மந்திரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவரிடம் விவரங்களை எடுத்து கூறினேன். அதற்கு அவர், இதுகுறித்த முழு விவரங்களை கொண்டு வருமாறு கூறினார். அவரை டெல்லியில் சந்திக்கும்போது இந்த விவரங்களை வழங்குவேன்.

அண்டை மாநிலங்களுடனான நதி நீர் பங்கீடு குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்க முடிவு செய்துள்ளேன். இதற்கு தேதியை இறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story