திருச்சி காளியம்மன் கோவில் தெருவில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகளை 6 மாதத்தில் முடிக்க திட்டம்


திருச்சி காளியம்மன் கோவில் தெருவில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகளை 6 மாதத்தில் முடிக்க திட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2021 6:39 AM IST (Updated: 12 Aug 2021 6:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் புதிய மார்க்கெட் கட்டும் பணியை 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

திருச்சி, 

திருச்சி சத்திரம் பஸ்நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் புதிய மார்க்கெட் கட்டும் பணியை 6 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

புதிய மார்க்கெட் 

திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பட்டவொர்த்ரோடு அருகில் உள்ள காளியம்மன் கோவில் தெருவில் பல ஆண்டுகளாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட்டை அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி செலவில் புதிய காய்கறி மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. 

சுமார் 3 ஆயிரம் சதுரமீட்டரில் தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் அமையும் இந்த மார்க்கெட்டில் பல்வேறு வசதிகளுடன் புதிதாக கடைகள் கட்டப்பட உள்ளன. மேலும், கார்கள் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதியும் செய்யப்பட உள்ளது. 

6 மாதத்தில் முடிக்க திட்டம் 

இதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இந்த இடத்தில் இருந்த கடை உரிமையாளர்களுக்கு மாற்று இடம் வழங்கவும், புதிய மார்க்கெட்டில் முன்னுரிமை வழங்கவும் கோரிக்கை வைத்து கடைகளை காலி செய்ய மறுத்துவிட்டனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். இதனால் வணிக வளாகம் கட்டும் பணி மந்தநிலையில் இருந்தது.

இந்த வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் அங்கிருந்த 18 பழைய கடைகளும் இடித்து அகற்றும் பணி நடந்தது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறும் என்றும், 6 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story