ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு


ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் - பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 12 Aug 2021 8:12 AM IST (Updated: 12 Aug 2021 8:22 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பூரத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் ஆகம விதிகள் படி பூஜைகள் மட்டும் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. 

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோன்று கோட்டையில் உள்ள வரமஹாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவிலிலும் ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாள் அம்மையாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வளையல் அலங்கார சேவை நடந்தது. தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 

பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள வந்தனர். அவர்களை விழாக்குழுவினர் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதேபோல் தர்மபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள பூவாடைக்காரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு வளையல் அலங்கார சேவை நடந்தது.

இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், நெசவாளர் நகர் ஓம்சக்தி மாரியம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோன்று மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் உள்ள மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.

Next Story