மது குடிக்க தந்தை பணம் தர மறுத்ததால் - வாலிபர் தீக்குளித்து தற்கொலை


மது குடிக்க தந்தை பணம் தர மறுத்ததால் - வாலிபர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 12 Aug 2021 2:13 PM IST (Updated: 12 Aug 2021 2:13 PM IST)
t-max-icont-min-icon

மது குடிக்க தந்தை பணம் தர மறுத்ததால் வாலிபர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை அமைந்தகரை கண்ணப்பன் தெருவில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் நடுரோட்டில் நின்று கொண்டு தனது கையில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ மளமளவென பரவியதால் வலியால் அலறி துடித்தார்.

அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பொதுமக்கள், தண்ணீரை ஊற்றி அவரது உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் கிருபாநிதி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் பலியான வாலிபர், சூளைமேடு, ஸ்ரீராமபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவருடைய மகன் பிரபாகரன் (வயது 33) என்பது தெரியவந்தது.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிரபாகரன், வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தினமும் குடிப்பதற்காக தந்தை கோதண்டராமனிடம் இருந்து அவரது பென்சன் பணத்தை வாங்கி செல்வார்.

வழக்கம்போல் நேற்று முன்தினம் குடிக்க பணம் தரும்படி தந்தையிடம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் அமைந்தகரை, கண்ணப்பன் தெருவில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலை வாங்கி வந்து நடுரோட்டில் தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்தது தெரிந்தது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story