பஞ்சு மில்லில் தீ விபத்து


பஞ்சு மில்லில் தீ விபத்து
x
தினத்தந்தி 12 Aug 2021 4:18 PM IST (Updated: 12 Aug 2021 4:18 PM IST)
t-max-icont-min-icon

சேவூர் அருகே பஞ்சு கழிவு அரைவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பஞ்சுகள் மற்றும் பொருள்கள் எரிந்து நாசமானது.

சேவூர்
சேவூர் அருகே பஞ்சு கழிவு அரைவை ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள், பஞ்சுகள் மற்றும் பொருள்கள் எரிந்து நாசமானது. 
கழிவு பஞ்சு ஆலை
திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே அ.குரும்பபாளையத்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது. இதில், தஞ்சாவூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் பஞ்சு கழிவு அரைக்கும் ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில், வெளிமாநிலத்தை சேர்ந்த 5க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை எந்திரத்தை இயங்கி பணிகள் நடைபெற்று வந்தது. 
அப்போது எதிர்பாராத விதமாக அரவை எந்திரத்தில் இருந்து தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அப்போது எந்திரத்தில் பஞ்சு கழிவுகளும் இருந்ததால் தீ வேகமாக பரவி குடோன் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. உடனே தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து அவினாசி  தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
பல ரூபாய் பொருட்கள் சேதம்
உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
 இருப்பினும் தீ மளமளவென பரவியதில், உள்ளிருந்த எந்திரம், கழிவு பஞ்சுகள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story