தூத்துக்குடி மாவட்டத்தில் 23 கிராமங்களில் 100 சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டத்தில் 23 கிராமங்களில் மக்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளனர்.
தூத்துக்குடி, ஆக.13-
தூத்துக்குடி மாவட்டத்தில் 23 கிராமங்களில் மக்கள் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இதற்காக சம்மந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 1ந் தேதி முதல் 7ந் தேதி வரை விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது பல்வேறு ஊர்வலங்கள், பேரணிகள், கண்காட்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காடு, திருப்பணிசெட்டிகுளம், பழையகிராமம், புன்னையடி, டக்கர்புரம், அருணாசலபுரம், மணப்பாடு, காட்டுராமன்பட்டி, குலசேகரபுரம், நவலக்கம்பட்டி, லட்சுமிபுரம், உசிலம்பட்டி, முத்துசாமிபுரம், வள்ளிநாயகிபுரம், கே.சுப்பிரமணியபுரம், கே.தளவாய்புரம், கழுகாசலபுரம் புதூர், வெயிலகந்தபுரம், ஆசூர் தளவாய்புரம், மாவில்பட்டி, பட்டிதேவன்பட்டி, சென்னமரெட்டிபட்டி, நாகம்பட்டி ஆகிய 23 கிராமங்களிலும், கோவில்பட்டி 20-வது வார்டிலும் அனைத்து மக்களும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளனர்.
பாராட்டு
இதைத் தொடர்ந்து 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட கிராமங்கள் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரானா 3வது அலை பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் மாவட்டத்தில் 18 சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கொரோனா முதல் அலையில் நோய் பரவல் மிகப்பெரும் சவாலாக இருந்தது. எந்த வகையில் நோய் பரவுகிறது, யாரை எல்லாம் பரிசோதனை செய்வது, பரிசோதனை நிலைய வசதிகள் போன்றவைகள் கையாளுவதில் சில சிரமங்கள் இருந்தன. 2ம் அலையில் ஆக்சிஜன் உள்ளிட்ட வகைகள் சற்று குறைவாக கிடைக்கப்பட்டன. பரிசோதனை கூடங்கள், மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டன. விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. முதல் அலையை விட இரண்டாம் அலையில் இறப்பு விகிதம் சற்று அதிகரித்து காணப்பட்டன.
3வது அலை
தற்போது 3வது அலை நெருங்கி வருகிறது. கொரோனா நோய் தொற்று உருமாறும் வைரஸ் என்பதால் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்ககூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். மக்கள் அதிகம் கூடும் இடத்தில் மாநகராட்சியின் மூலம் ஆட்டோ ஓட்டுநர், பால் வியாபாரி, பஸ் டிரைவர் என பல்வேறு நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. நமது மாவட்டத்தில் 4 லட்சத்து 85 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் 85 ஆயிரம் பேர் 2ம் தவணை தடுப்பூசி போட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் நேரு, நல பணிகள் இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் அனிதா, போஸ்கோராஜா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜசெல்வி, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story