ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு
ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவாரூர்:-
ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
143 வீடுகள்
ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகள் 143 பேரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், வீடுகளின் சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார்.
அப்போது எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கே.கலைவாணன், மாரிமுத்து, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
ரூ.960.66 கோடி திட்ட மதிப்பீடு
ஆசிய வளர்ச்சி வங்கி திட்டத்தின் கீழ் காவிரி டெல்டாவில் உள்ள வெண்ணாறு உப வடிநிலத்தை சேர்ந்த ஆறுகளின் உட்கட்டமைப்பு, பாசன வசதிகள், நிலங்களின் நீர் மேலாண்மை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரூ.960.66 கோடி திட்ட மதிப்பீட்டில் முதல் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த ஆறு, கால்வாய் மற்றும் வடிகால் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டி உரிய கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,237 குடும்பங்கள் திட்டத்தினால் பாதிக்கப்படுவார்கள் என கண்டறியப்பட்டது.
வீடு கட்டும் பணி
இந்த திட்டத்தினால் பாதிப்புக்கு உள்ளாகும் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மற்றும் மீள் குடியேற்ற செயல்பாட்டிற்காக குடும்பத்தினரின் விருப்ப தேர்வின் அடிப்படையில் 751 குடும்பங்களுக்கு குடியிருப்பு வீடுகள் ரூ.71 கோடியே 34 லட்சத்து 50 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 27 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் முதற்கட்டமாக 318 வீடுகள் கட்டப்பட்டு ஏற்கனவே பயனாளிகளிடம் வழங்கப்பட்டது. தற்போது அலிவலம், பழையங்குடி, ஆலத்தூர், குன்னியூர், அரிச்சந்திரபுரம், திருவிடைவாசல் ஆகிய ஊராட்சி பகுதிகளில் 143 பேருக்கு குடியிருப்பு வீடுகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம், வெண்ணாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், இளங்கோ, ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story