மதுரை கோட்டத்திற்கு மாற்ற வேண்டும்


மதுரை கோட்டத்திற்கு மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 12 Aug 2021 5:40 PM IST (Updated: 12 Aug 2021 5:40 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சிபோத்தனூர் ரெயில் பாதையை மதுரை கோட்டத்திற்கு மாற்ற வேண்டும் என்று உடுமலை தொழில் வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

உடுமலை
பொள்ளாச்சிபோத்தனூர் ரெயில் பாதையை மதுரை கோட்டத்திற்கு மாற்ற வேண்டும் என்று உடுமலை தொழில் வர்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ரெயில் சேவை
 பொள்ளாச்சி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரத்திடம், உடுமலை தொழில் வர்த்தக சபை தலைவர்ஆர்.அருண் கார்த்திக், உடுமலை ரெயில் பயணிகள் நல சங்கத்தலைவர் ஆர்.கந்தசாமி ஆகியோர் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது
 கோவை-திண்டுக்கல் ரெயில்பாதை, அகல ரெயில் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டபிறகு அந்த பாதை எதிர்பார்த்த அளவிற்கு உபயோகத்திற்கு வரவில்லை. தற்போதைய பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் போக்குவரத்து சேவைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய வில்லை. மேலும் இந்த ரெயில் வழித்தடம் தற்போது முழுமையாக மின்மயமாக்கப்பட்டு வருகிறது.
மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கப்பட்ட ரெயில்கள்கூட தற்போது இயக்கப்படுவது கிடையாது. இதற்கு முக்கிய காரணம் கோவைதிண்டுக்கல் ரெயில் பாதையானது சேலம், மதுரை, பாலக்காடு ஆகிய 3 ரெயில்வே கோட்டங்களில் வருவதுதான். அதனால் மக்களின் தேவைக்கு ஏற்ப முடிவு எடுக்கவேண்டு மென்றால் 3 ரெயில்வே கோட்ட அலுவலர்களும் சேர்ந்து செயல்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
கூடுதல் வருமானம்
மேலும் மேட்டுப்பாளையம் முதல் திண்டுக்கல் வரையிலான வழித்தடத்தில் ரெயில்களை இணைக்கும் பட்சத்தில், கோவையில் இருந்தும், திண்டுக்கல்லில் இருந்தும் தற்போது இயங்கிக்கொண்டிருக்கும் ரெயில்களுக்கு இணையாக அமையும்.  அதன்மூலம் ரெயில்வே துறைக்கு வருமானம் கூடுவதற்கு வாய்ப்பாக அமையும்.
மேட்டுப்பாளையம்திண்டுக்கல் ரெயில் வழித்தடத்தில் தினசரி வேலைக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரி, பள்ளிகளுக்கு செல்லும் மாணவமாணவிகள் ஆகியோரின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ரெயில்வே கால அட்டவணையை நிர்ணயிக்க  வேண்டும். மேலும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம், போத்தனூர் சந்திப்பு ஆகிய இடங்களில் ரெயில் பராமரிப்பு வசதிகளையும், ரெயில் நிறுத்த கட்டமைப்புகளையும் விரைந்து மேம்படுத்தும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொள்ளாச்சிபோத்தனூர் ரெயில்பாதை
எனவே பொள்ளாச்சிபோத்தனூர் ரெயில்பாதையை தமிழகத்தில் உள்ள மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு மாற்றித்தர ஏற்பாடு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இ்வ்வாறு அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Next Story