மயிலாடுதுறை அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; மனைவி கண் முன்னே முதியவர் பலி


மயிலாடுதுறை அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; மனைவி கண் முன்னே முதியவர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2021 6:04 PM IST (Updated: 12 Aug 2021 6:04 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் மனைவி கண் முன்னே முதியவர் பரிதாபமாக பலியானார். வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் ஊர் திரும்பியவருக்கு இந்த துயரம் நேர்ந்தது.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 60). வெளிநாட்டில் வேலை பார்ந்து வந்த இவர், கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் எலந்தங்குடியில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஆடுதுறைக்கு முகமது ரபீக் தனது மனைவி அராபத் நிஷாவுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

மயிலாடுதுறை கண்ணாரத்தெரு முக்கூட்டு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது பஸ்சின் பின்புற சக்கரம் முகமது ரபீக் தலையில் ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் அவரது மனைவி அராபத் நிஷா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை போலீசார், விபத்தில் பலியான முகமது ரபீக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரைவர் கார்த்திகேயன்(46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story